கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி கட்டிடத் தொழிலாளர்கள் இருவர் பலி: காப்பாற்றச் சென்றவரும் உயிரிழந்த சோகம்

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி  கட்டிடத் தொழிலாளர்கள் இருவர் பலி: காப்பாற்றச் சென்றவரும்  உயிரிழந்த சோகம்

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி கட்டிடத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். அவர்களைக் காப்பற்றச் சென்றவரும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே உள்ள தோரணக்கல்பட்டி கரட்டுப்பட்டி காந்தி நகரில் வழக்கறிஞர் குணசேகரன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு புதிதாக கழிவுநீர் தொட்டி கட்டப்பட்டு இரண்டு மாதங்களாக மூடிப்போட்டு மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தொட்டியின் உள்பகுதியில் உள்ள முட்டுகளைப் பிரிப்பதற்காக இன்று மாலை கட்டிடத் தொழிலாளர்களான தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த மோகன்ராஜ் (23), தோரணக்கல்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் (38) ஆகியோர் உள்ளே இறங்கியுள்ளனர்.

அப்போது திடீரென விஷவாயு தாக்கியதால் அவர்கள் உள்ளே மயங்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்ட பக்கத்துக் கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மணவாசியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான சிவா என்ற ராஜேஷ்குமார் (35) அவர்களை மீட்க தொட்டிக்குள் இறங்கினார். அவரும் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார்.

இதனைக் கண்ட அங்குள்ளவர்கள் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விஷவாயுவைக் கட்டுப்படுத்தினர். அதன் பின் கழிவுநீர் தொட்டிக்குள் உள்ளே இறங்கி மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த எஸ்.பி. சுந்தரவதனம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கரூர் கோட்டாட்சியர் ரூபினாவும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கரூர் மாநகராட்சி அலுவலர்களும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in