குழந்தைகளைக் கொடூரமாக கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்: கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

குழந்தைகளைக் கொடூரமாக கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்: கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

குடும்ப தகராறு காரணமாகத் தனது இரண்டு குழந்தைகளை அடித்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாயால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்துள்ளது அத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகசம்பத்(46). விவசாயினான இவருக்கும் ரேவதி (எ) பேபி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஹர்ஷிதா(13), கலைவேந்தன்(7) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர். கனகசம்பத்துடன் அவரின் தாயார் விஜயமணியும் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகளைப் பார்த்து விட்டு, கனகசம்பத் ஓலப்பாளையத்துக்கு வாகனத்திற்கு பெட்ரோல் போடச் சென்றுள்ளார். அப்போது இரவு 7 மணியளவில் வீட்டிலிருந்த மனைவி, குழந்தைகளைக் காணவில்லை என அவரின் தாய் விஜயமணி செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கனகசம்பத் அக்கம் பக்கத்தில் அவர்களைத் தேடிவிட்டு வீட்டுத் தோட்டத்தில் உள்ள அறைக்கு சென்று பார்த்துள்ளார். அறை தாழிட்ட நிலையில் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் குழந்தைகள் இறந்து கிடந்தனர். அவர்கள் பக்கத்தில் இருப்பு பைப் மற்றும் பாதி தீர்ந்த நிலையில் களைக்கொல்லி மருந்து பாட்டிலும் இருந்துள்ளது. களைக்கொல்லி மருந்தை உட்கொண்ட மனைவி வாந்தி எடுத்த நிலையில் மயங்கி விழுந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவர்கள் மூவரும் ஆம்புலன்ஸின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இரண்டு குழந்தைகள் இறந்து விட்டதை உறுதி செய்த மருத்துவர்கள், மனைவி ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரேவதி தலையின் பின்பகுதியில் வலி ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். வலி அதிகமாக இருக்கும் போது அடிக்கடி கோபப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள நினைத்த ரேவதி, அதற்கு முன்பாக குழந்தைகளைக் கொடூரமான முறையில் கொன்றுள்ளார். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in