
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளைகள் ஏற்றி வந்த டாட்டா ஏஸ் சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் காளைகளின் உரிமையாளர் உட்பட இருவரும், இரண்டு காளைகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வன்னியன்விடுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி, சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகள் பங்கு பெற்றன. அவ்வகையில் மணப்பாறையில் இருந்து டாட்டா ஏஸ் வாகனத்தில் ஆறு பேர் தங்களது மூன்று ஜல்லிக்கட்டு காளைகளோடு வந்திருந்தனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் தங்களது காளைகளை அவிழ்த்து விட்டபிறகு அவற்றை மீண்டும் டாட்டா ஏஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மணப்பாறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திருவரங்குளம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசுப்பேருந்துடன் டாட்டா ஏஸ் வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் டாட்டா ஏஸ் வாகனம் முற்றிலுமாக சிதைந்தது.
இதில் டாட்டா ஏஸ் வாகனத்தில் இருந்த பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த விக்கி (24), மணப்பாறை செவலூர் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன்(26) ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் வாகனத்தில் இருந்த மூன்று காளைகளில் இரண்டு காளைகளும் உயிரிழந்தன. ஒரு காளை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர். ஆனால் அந்த காளையும் உயிரிழந்துவிட்டது.
வாகனத்தில் வந்த மீதமுள்ள நான்கு பேர் மட்டுமல்லாது பேருந்தில் வந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிக்காக வந்த காளைகளும், உரிமையாளர் உள்ளிட்ட இருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.