தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மதுரையைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பலி: சாமி கும்பிட வந்த இடத்தில் சோகம்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மதுரையைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பலி: சாமி கும்பிட வந்த இடத்தில் சோகம்

திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் திருநெல்வேலி மாவட்டம், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்தபோது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இன்று பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது நிலையூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த சரவணன், விஷ்ணுகுமார் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் நெல்லை மாவட்டம், காரையாறு பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் சாமி தரிசனத்திற்காக இன்று சென்றனர்.

அங்குள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலின்முன்பு தாமிரபரணி ஆறு செல்கிறது. சரணனின் மகன் கார்த்திக்(8) மற்றும் விஷ்ணுகுமாரின் மகன் ஹரீஸ்குமார்(10) ஆகியோர் தாமிரபரணி ஆற்றின் முன்பு நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள் திடீர் என மாயமாகினர். தங்கள் மகன்களைக் காணாமல் சரவணனும், விஷ்ணுகுமாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் சிறிதுநேரத்தில் இரு சிறுவர்களும் தாமிரபரணி ஆற்றில் பிணமாக மிதந்து வந்தனர். நீரின் ஆபத்துத் தெரியாமல் இவர்கள் தண்ணீருக்குள் இறங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கல்லிடைக்குறிச்சி போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in