
ராமநாதபுரத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட முதியவர் உள்பட இருவர் பிரின்டிங் மிஷினுடன் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் ராஜேஸ்வரன் (28). திருப்பாலைக்குடி அருகே மணக்குடி பகுதியில் கள்ள நோட்டுகளை மாற்றிய இவர், 1.33 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளுடன் நேற்று பிடிபட்டார்.
இவரிடம் திருவாடானை கோட்ட குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். தனக்கு கள்ள நோட்டுகள் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வந்ததாக கூறினார். இதனடிப்படையில், திருப்பாலைக்குடி குற்றத்தடுப்பு போலீஸார் அங்கு விரைந்தனர்.
திருசெங்கோட்டைச் சேர்ந்த ரவி (60), பூபாலன் (39) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய அச்சு இயந்திரம், காகிதங்களை வெட்டும் இயந்திரம், லேப் டாப், காகிதங்கள், 4 செல்போன்கள் 18 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் 7 ஆயிரத்து 200 மதிப்பிலான200 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் அழைத்து வரப்பட்ட இவர்களிடம் திருப்பாலைக்குடி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.