
டெல்லியில் 3 கைத்துப்பாக்கி, 22 தோட்டக்களுடன் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தினம் ஜன.26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதத் தொடர்பில் இருப்பவர்கள் டெல்லியில் ஊடுறுவாமல் இருக்க பலத்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பயங்கவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகத்தில் இருவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், உத்தராகண்ட்டில் உள்ள உத்தம்சிங் நகரில் வசிக்கும் ஜக்ஜித்சிங் என்ற ஜக்கா(29), டெல்லி ஜஹாங்கிர்புரியில் வசிக்கும் நௌஷாத் (56) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் 22 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
டெல்லி சிறப்பு பிரிவு போலீஸரால் கைது செய்ய்ப்பட்டுள்ள ஜக்காவிற்கு கனடா நாட்டைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேதிக்கப்படுகிறது. அத்துடன் உத்தராகண்ட் மாநிலத்தில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் பரோலில் வெளியே வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு நபரான நௌஷாத், 'ஹர்கத் உல்-அன்சார்' என்ற பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது. அவர் இரண்டு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்றும், வெடிகுண்டு வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்றும் போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் தீவிரவாத நடவடிக்கைக்கு எதுவும் திட்டமிட்டார்களா என்று டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.