ஆரோவில் பகுதியில் அதிரடி ரெய்டு: கஞ்சா எண்ணெய், சிரிஞ்சுடன் 2 பேர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எண்ணெய்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எண்ணெய்

விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா வேட்டையில்  கஞ்சா எண்ணெயையும் அதை செலுத்தும் ஊசிகளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும்  ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.O தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துக்கள் முடக்கி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கஞ்சா வேட்டையில் கஞ்சாவுக்கு பதிலாக கஞ்சா எண்ணெயை  போதை ஆசாமிகள்  பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீநாதா  மேற்பார்வையில் கோட்டகுப்பம் உட்கோட்டம் ஆரோவில் காவல் நிலைய போலீஸார், ஆரோவில் பகுதியில் நேற்று அதிரடியாக கஞ்சா வேட்டையில்  ஈடுபட்டனர்.  அதில் அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் இருந்த இருவரிடம்  இருந்த சிறிய பாட்டிலை சோதனை செய்தபோது அதில் கஞ்சா எண்ணெய்  இருந்தது கண்டறியப்பட்டது.  அத்துடன் அதை செலுத்தும் ஊசிகளையும் அவர்கள்  வைத்திருந்தனர்.

அதையடுத்து அதை வைத்திருந்த  கேரள மாநிலம் ஆலப்புழாவைச்  சேர்ந்த குருவில்லா மகன்  போவாஸ் (24 ), சென்னை ஆவடியைச் சேர்ந்த பிரசாத் ஜோசப் மகன் ஷெரின் ஓமின் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 30 மி.லி கொண்ட கஞ்சா  எண்ணெயையும், மூன்று சிரிஞ்சுகளையும் பறிமுதல் செய்தனர்

அதிரடி வேட்டையில் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது போலீஸார்  மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கஞ்சாவுக்கு பதிலாக கஞ்சா எண்ணெய் போதை ஆசாமிகள் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in