இரிடியம் விற்பனை செய்வதாகக் கூறி 20 லட்சம் மோசடி: போலீஸிடம் சிக்கிய 'சதுரங்க வேட்டை' கும்பல்!

இரிடியம் விற்பனை செய்வதாகக் கூறி 20 லட்சம் மோசடி: போலீஸிடம் சிக்கிய 'சதுரங்க வேட்டை' கும்பல்!

'சதுரங்க வேட்டை' திரைப்பட பாணியில் இரிடியம் விற்பனை மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி மோசடி செய்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து அம்மன் சிலைகள், மான் கொம்புகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிழக்கத்திக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தன்னிடம் சிலர் இரிடியம் விற்பதாகக் கூறி ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் ஓமலூர் சர்க்கரை செட்டிப்பட்டியைச் சேர்ந்த ராஜி மற்றும் வட்டக்காடு பகுதியைச் சேர்ந்த வில்வேந்திரன் ஆகியோரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இரிடியம் விற்பதற்காக ராதாகிருஷ்ணனை ஏமாற்றியதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் இரண்டு அம்மன் சிலைகள், நான்கு மான் கொம்புகள், விலைமதிப்புமிக்க திமிங்கிலத்தின் எச்சம், இரண்டு துப்பாக்கிகள், 47 அரிய வகை கற்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இது குறித்துப் பேசிய சேலம் எஸ்.பி. ஸ்ரீ அபிநவ், “கடந்த இரண்டு மாதங்களாக ஓமலூர் பகுதியில் பண மோசடி, இரிடியம் மோசடி உள்ளிட்டவற்றில் சிலர் ஈடுபட்டு வருவதாக எங்களுக்குத் தகவல்கள் வந்தன. அதன் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக ராஜி, வில்வேந்திரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராதாகிருஷ்ணன் என்பவரிடம், அவர்கள் 20 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. மேலும் ஐந்து பேர் இவர்களிடம் பணத்தைப் பறிகொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோல் யாரேனும் பாதிக்கப்பட்டால் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். இரிடியம் ரைஸ் புல்லிங், போலி கற்கள், மண்ணுளிப் பாம்பு, பணம் இரட்டிப்பு போன்ற விவகாரங்களில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in