பாண்டி சாராயத்தை வீட்டில் பதுக்கி விற்பனை செய்த பெண்: ரகசியத் தகவலில் போலீஸ் அதிரடி

கைது செய்யப்பட்ட 2 பேர்
கைது செய்யப்பட்ட 2 பேர்பாண்டி சாராயத்தை வீட்டில் பதுக்கி விற்பனை செய்த பெண்: ரகசியத் தகவலில் போலீஸ் அதிரடி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் சாராயத்தை நுண்ணறிவு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்ததோடு, இருவரை கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதுச்சேரி மாநில சாராயம் மற்றும் குறைந்த விலை மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாக  இருந்து வருகிறது.  காரைக்கால் பகுதி  மயிலாடுதுறைக்கு மிக அருகில் இருப்பதால், அங்கிருந்து சாராயம் உள்ளிட்ட மதுபானங்கள் சுலபமாக  கடத்தி வரப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடை விடுமுறை நாட்களில் கூடுதல் விலைக்கு விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் கிராமத்தில்  விற்பனை செய்வதற்காக பாண்டி சாராயம் கடத்தி வரப்பட்டு  பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

தகவலின் பேரில் விரைந்து வந்த திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன்  தலைமையிலான போலீஸார்,  சீர்காழி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வி  உள்ளிட்ட காவல்துறையினருடன் இணைந்து  பிரபல சாராய வியாபாரியான திருமுல்லைவாசல் காமராஜ் நகரை சேர்ந்த மாறன் வீட்டில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். 

அந்த சோதனையில்  வீட்டின் பின்பக்கம்  மதில் சுவர் அருகே 35 லிட்டர் கொள்ளளவு உள்ள 23 கேன்களில் 805 லிட்டர்  சாராயமும், மற்றும் 35 மூட்டைகளில் 1750 பாக்கெட்டுகளின் நிரப்பப்பட்ட 175 லிட்டர்  என மொத்தம் 980 லிட்டர் பாண்டி சாராயம் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  

இதனையடுத்து சாராய வியாபாரியான மாறனின் மனைவி லட்சுமி மற்றும் அவரிடம் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் 42 வயதான பாரதி ஆகிய இருவரையும்  பிடித்த நுண்ணறிவு பிரிவு போலீஸார் அவர்களை  மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

இது குறித்து வழக்குப் பதிந்த சீர்காழி மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் பிடிபட்ட சாராயத்துடன் மூன்று மடங்கு தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படும் என்றும், பிடிபட்ட சாராயத்தின் தற்போதைய மதிப்பு 3 லட்சம் ரூபாய் எனவும்,  அதில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யும் பட்சத்தில் அதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய் அளவுக்கு இருக்கும் எனவும்  காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in