ஜேபி.நட்டாவின் ட்விட்டரில் விளையாடிய கிரிப்டோ ஆர்வலர்கள்!

ஜேபி.நட்டாவின் ட்விட்டரில் விளையாடிய கிரிப்டோ ஆர்வலர்கள்!
ஜே.பி.நட்டா

பாஜக தேசிய தலைவரான ஜேபி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு, மர்ம நபர்களால் இன்று காலை ஹேக் செய்யப்பட்டது.

அரசியல் பிரபலங்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதன் வரிசையில் பாஜக தேசிய தலைவரான ஜேபி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு இன்று(பிப்.27) காலை மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அதில் பதியப்பட்ட தகவல்களை வைத்து ஹேக்கர்கள், கிரிப்டோகரன்சி ஆர்வலர்கள் எனத் தெரிய வருகிறது.

ஜேபி.நட்டாவின் அதிகாரபூர்வ கணக்கில் இன்று காலை இடப்பட்ட ஒரு பதிவு, ‘ரஷ்ய மக்களுடன் துணை நிற்போம்’ என்ற வாசகத்துடன், ‘தற்போது கிரிப்டோகரன்சி நன்கொடைகள் பிட்காயின் மற்றும் எதிரியம் வாயிலாக பெறப்படுகின்றன’ என ஆங்கிலத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இதே பொருளில் ரஷ்யா என்பதற்கு பதிலாக உக்ரைன் என மாற்றி இந்தியிலும் வாசகங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

ஜேபி.நட்டா கணக்கிலிருந்து தொடர்ந்து வெளியான இரண்டாவது பதிவில், ’மன்னிக்கவும் எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் ரஷ்யாவுக்கு நன்கொடை தாருங்கள்’ என்றொரு பதிவும் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து, ஜேபி.நட்டா அலுவலகம் மேற்கொண்ட முயற்சிகளால் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டதுடன், முந்தைய பதிவுகள் அழிக்கப்பட்டன.

நட்டாவின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இடையில் நிகழ்ந்த மாற்றங்கள் சரி செய்யப்பட்டதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசம்பர் மத்தியில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு இதே போன்று ஹேக் செய்யப்பட்டு, அதில் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவான பதிவுகள் இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.