குஜராத் முதல்வர் வேட்பாளரை அறிவித்தது ஆஆக: யார் இந்த இசூதான் கத்வி?

இசூதான் கத்வி
இசூதான் கத்வி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக, முன்னாள் ஊடகவியலாளர் இசூதான் கத்வி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் எனும் எதிர்பார்ப்பு நிலவியது.  மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சட்டா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனச் செய்திகள் வெளியாகின.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு அழைப்பு விடுத்த அர்விந்த் கேஜ்ரிவால் அதற்காக, பிரத்யேக செல்போன் எண்ணை அறிவித்தார். அதன்படி, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்று ஆட்சியமைத்தது. அதே பாணியில், குஜராத்திலும் பிரத்யேக செல்போன் எண்ணை வெளியிட்ட அர்விந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி சார்பில் யார் முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் எனத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதன் முடிவை இன்று அறிவித்தார் அர்விந்த் கேஜ்ரிவால். அதன்படி, 16 லட்சம் பேர் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பில் 73 சதவீதம் பேர் இசூதான் கத்வியை முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆம் ஆத்மி கட்சியின் இணைப் பொதுச் செயலாளராகப் பதவிவகிக்கும் இசூதான் கத்வி, குஜராத் தேர்தலில் அக்கட்சியின் முதன்மைப் பிரச்சாரப் பேச்சாளராகச் செயல்பட்டுவருகிறார். அம்மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருகிறார்.

செளராஷ்டிரப் பகுதியைச் சேர்ந்த இவர், கத்வி சமூகத்தைச் சேர்ந்தவர். குஜராத்தில் இந்தச் சமூகத்தினர் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவின் கீழ் வருகிறார்கள்.

குஜராத்தில் செயல்பட்டுவரும் உள்ளூர் செய்தி சேனலான விடிவி-யின் ஆசிரியராகப் பணியாற்றிவந்தவர் இசூதான் கத்வி. ‘மஹாமந்தன்’ எனும் பெயரில் இவர் நடத்திவந்த நிகழ்ச்சி மிகப் பிரபலமானது. பின்னர் ஊடகப் பணியிலிருந்து விலகி கடந்த ஆண்டுதான் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in