அடகுக்கடைகளை குறிவைத்து மோசடி: சிசிடிவியால் சிக்கிய சின்னத்திரை நடிகை

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி.
சின்னத்திரை நடிகை மகாலட்சுமி.அடகுக்கடைகளை குறிவைத்து மோசடி: சிசிடிவியால் சிக்கிய சின்னத்திரை நடிகை

சென்னையில் அடகுக்கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து பணமோசடியில் ஈடுபட்ட சின்னத்திரை நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் ஏகே நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி (33). இவர் சென்னை பெரம்பூரில் உள்ள கண்ணய்யா லால் ஜெயின் அடகுக்கடையில் பிப். 24-ம் தேதி தாலிச்செயின் ஒன்றை அடகு வைத்தார். மருத்துவத் தேவைக்காக அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி இந்த செயினை அவர் அடகு வைத்தார். அத்துடன் அந்த நகைக்கு 40 ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால், அவர் ஆதார் கார்டை எடுத்து வராததால் தற்போது 20 ஆயிரம் தான் தர முடியும், நாளை ஆதார் கார்டை கொடுத்துவிட்டு எஞ்சியுள்ள பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கடை உரிமையாளர் ஜெயின் கூறியுள்ளார். இதற்கு மகாலட்சுமியும் சம்மதம் தெரிவித்துள்ளார். அத்துடன் தாலிச்செயின் என்பதால் அதை உரசிப் பார்க்க வேண்டாம் என மகாலட்சுமி சென்டிமென்டாக பேசியதால் அதனை உரசி பார்க்காமலேயே ஜெயின் அடகு வாங்கி பணத்தைக் கொடுத்துள்ளார்.

மறுநாள் மகாலட்சுமி ஆதார் கார்டை கொண்டு வராததால் சந்தேகம் அடைந்த ஜெயின் தாலிச்செயினை உரசிப் பார்த்தார். அது போலி தங்கம் எனத்தெரிய வந்தது. இதுகுறித்து அவர் போலீஸில் புகார் அளித்ததுடன், அடகுக்கடை நடத்தி வரும் தன்னுடைய நண்பர்களுக்கு இதுகுறித்த தகவலை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். அப்போது அரும்பாக்கத்தில் அடகுக்கடை நடத்தி வரும் சுரேந்தர்குமார் என்பவரும் தன்னுடைய கடையில் இதேபோன்று ஒரு வாரத்திற்கு முன் பெண் ஒருவர் மோசடி செய்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து அவரும் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பின் சிசிடிவி காட்சிகளை வைத்து மகாலட்சுமியை போலீஸார் கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் இதே போல் அவர் திருவிக நகர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலி நகைகளை அடகுக்கடைகளில் அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 2500 ரூபாய் பணம், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த கணவர் பிரிந்து சென்றதால், மகனை வளர்க்க பணமில்லாததால் இப்படி மோசடியில் ஈடுபட்டதாக மகாலட்சுமி கூறினார். அவர் சின்னத்திரை தொடர்களிலும், விளம்பரங்களிலும் நடித்தது விசாரணையில் தெரிய வந்தது. இதன் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாலட்சுமி, மகனின் படிப்பு செலவிற்காக மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை நீதிபதி எச்சரித்து அனுப்பி வைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in