டிக்டாக் தோழியைக் கட்டையால் தாக்கிய சின்னத்திரை நடிகர்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்த போலீஸ்

சூர்யாதேவியுடன் நாஞ்சில் விஜயன்.
சூர்யாதேவியுடன் நாஞ்சில் விஜயன்.

டிக்டாக் பிரபலமான தனது முன்னாள் பெண் தோழியைக் கட்டையால் தாக்கிய வழக்கில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் (31). இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராகவும், தொலைக்காட்சி தொடர், கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடித்து புகழ் பெற்றவர்.

நாஞ்சில் விஜயன்.
நாஞ்சில் விஜயன்.

இவரும் டிக்டாக் பிரபலமான திருச்சியைச் சேர்ந்த சூர்யா தேவி என்பவரும் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை நண்பர்களாக பழகி வந்துள்ளனர். 2020 -ம் ஆண்டு நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் சூர்யா தேவி ஆகிய இருவரும் யூடியூப் மூலம் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதன் விளைவாக இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இச்சம்பவம் தொடர்பாக சூர்யா தேவியின் நெருங்கிய நண்பரான சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த 2020 அக். 11-ம் தேதி சூர்யா தேவி தனது நண்பர் அப்புவுடன் சென்று நாஞ்சில் விஜயனை நேரில் சந்தித்து இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அப்போது வாய்த்தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த நாஞ்சில் விஜயன் சூர்யா தேவி,அப்பு ஆகியோரை கட்டையால் சரமாரியாக தாக்கியதுடன், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்..

இதனையடுத்து கடந்த 2020 அக். 12-ம் தேதி சூர்யாதேவி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நடிகர் நாஞ்சில் விஜயன் இவ்வழக்கு விசாரணைக்கு முறையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இவ்வழக்கில் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனை வளசரவாக்கம் போலீஸார் இன்று கைது செய்தனர். ஏற்கெனவே நடிகர் நாஞ்சில் விஜயன் 2020 அக். 14 ஆம் தேதி சூர்யா தேவி தன்னை தாக்கிவிட்டதாகக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in