ஆமைகளைப் பாதுகாக்க சென்னையில் மறுவாழ்வு மையம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

ஆமைகளைப் பாதுகாக்க சென்னையில் மறுவாழ்வு மையம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

ஆமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு சென்னையில் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “நம் தமிழகத்தில் நீளமான கடற்கரைப் பகுதிகள் உள்ளன. இங்கு ஐந்து இன ஆமைகள் உள்ளன. அதில் சிறப்புப்பெற்ற ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் நோக்கத்தோடு 1974-ம் ஆண்டிலேயே ஆமைகளுக்கான குஞ்சு பொறிப்பகங்கள் அமைக்கப்பட்டது. அதன் அடுத்தகட்டமாக ஆமைகளைக் பாதுகாக்க மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்த மையம் ஆமைகளைப் பாதுகாப்பது மட்டுமன்றி ஆராய்ச்சி, தரவுகளைச் சேகரிப்பதிலும் கவனம் செலுத்தும். ஆமைகள் மறுவாழ்வு மையம் சென்னையில் அமைகிறது.

இங்கு காயம் அடைந்த ஆமைகள் மீட்கப்பட்டு விரைந்து சிகிச்சை அளிக்கப்படும். அவை குணம் அடைந்தபின்பு மீண்டும் கடலில் விடப்படும். இதேபோல் வணிக நோக்கில் ஆமைகளைக் கடத்துவோரைப் பிடிக்க சிறப்புப் புலனாய்வு முகமை அமைக்கப்படும். கடலோரப் பகுதிகளில் ஆமைகள் முட்டையிடும் இடங்கள், நகரும் பாரம்பர்யப் பகுதிகள் கண்காணிக்கப்படும். இந்தப் பணிகளில் மீனவர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆமைகளைக் காப்பதன் அவசியம் குறித்து உள்ளூர் மக்களுக்கும் விளக்கப்படும். விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை இந்த மையம் செய்யும். அவற்றின் இனப்பெருக்கத்திற்கு தகுந்த சூழல் கடற்கரையோரப் பகுதிகளில் உருவாக்கப்படும் ”கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in