
நில நடுக்க பேரிடருக்கு ஆளான துருக்கி - சிரியா தேசங்களின் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
துருக்கி - சிரியா எல்லையை ஒட்டி, பிப்.6 அன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலத்தடியில் சுமார் 18 கிமீ கீழே அடையாளம் காணப்பட்ட இந்த அதிர்வால், பூமியின் மேலே 7.8 என்றளவில் ரிக்டர் ஸ்கேலில் நிலநடுக்கம் உணரப்பட்டது. உலகம் கண்ட மிகமோசமான நில நடுக்கங்களில் ஒன்றாக இந்த சோகம் அரங்கேறியது.
அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்து மரணித்தார்கள். அடுத்தடுத்த அதிர்வுகள் காரணமாக, அடுத்து வந்த தினங்களிலும் கட்டிடங்கள் தொடர்ந்து தரைமட்டமாகி வந்தன. சிரியாவை விட துருக்கியின் பாதிப்பு பல மடங்கு அதிகமாக இருந்தது.
2 வாரங்களாக நீடித்த மீட்பு பணிகளில் ஏராளமானோர் நல்வாய்ப்பாக உயிரோடு மீட்கப்பட்டனர். உறைநிலையை தொடும் காலநிலை, அடுத்தடுத்து அச்சமூட்டும் நில அதிர்வுகள், உணவுப்பொருள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஆகியவை மீட்பு பணிகளுக்கு பெரும் சவாலாக நீடித்தன.
வெள்ளி இரவு தகவலின் படி துருக்கியில் மட்டும் 44,218 பேரும், சிரியாவில் 5,914 பேரும் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் துருக்கி - சிரியா நிலநடுக்க கோரத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் படுகாயமடைந்த ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.