துருக்கியின் துயரம்: இந்தியாவுக்கும் ஆபத்தா?

துருக்கி நிலநடுக்கம்
துருக்கி நிலநடுக்கம்இந்தியாவுக்கும் ஆபத்தா?

துருக்கி, சிரியா ஆகிய நாடுகள் நிலநடுக்கத்தால் உருக்குலைந்து கிடக்கின்றன. 2 ஆயிரம் என ஆரம்பித்த பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தையும் தாண்டி அதிகரித்ததால் உலகமே பதறித் துடிக்கிறது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆய்வாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ், இந்தியா, ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் அடுத்து நிலநடுக்கம் ஏற்படும் என தெரிவித்து பரபரப்பை உருவாக்கியுள்ளார். துருக்கி நிலநடுக்கத்தின் கோரமுகம் என்ன..? அந்த பூகம்பம் இந்தியாவுக்கும், உலகுக்கும் உணர்த்தும் பாடம் என்ன?

பிப்ரவரி 5-ம் தேதியின் இரவு துருக்கி, சிரியாவுக்கு மட்டும் விடியவேயில்லை. 6-ம் தேதி அதிகாலை 4:17 மணியளவில் துருக்கியின் காசியண்டெப் நகரை ‘எபிசென்டராக’ கொண்டு 7.8 ரிக்டர் அளவுகோலில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 17.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 2 நிமிடங்கள் வரை நீடித்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பான யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.

மீண்டும் அதே நாளில் துருக்கியின் காரமன்மராஸ் மாகாணத்தில் மதியம் 1.24 மணிக்கு 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது, அதன்பின்னர் துருக்கியில் 6 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் பதிவானது. இந்த நிலநடுக்கங்களால் துருக்கியில் ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர், கிலிஸ் உள்ளிட்ட 10 நகரங்கள் கடும் பாதிப்பினை சந்தித்துள்ளன.

துருக்கி சிரியா நிலநடுக்கம்
துருக்கி சிரியா நிலநடுக்கம்

சிரியாவிலும் அலெப்போ, ஹமா, லாதாகியா ஆகிய பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளிலும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்துள்ளன, இடிந்த கட்டிடங்களில் இருந்து மரண ஓலங்கள் காற்றில் கரைந்தபடி உள்ளது. உள்ளூர் நிர்வாகம் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை எடுத்தாலும், உலக நாடுகளும் பெரும் கருணையுடன் உதவிக்கரங்களை நீட்டி வருகின்றன. எத்தனை கரங்கள் நீண்டாலும் ஆற்ற முடியாத ரணத்துடன் துருக்கியும், சிரியாவும் தவிக்கின்றன. பனி மற்றும் மழை காரணமாகவும், போதிய பேரிடர் மீட்புப் படைகள் இல்லாத காரணத்தாலும் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சிரியாவை தொடர்ந்து வதைக்கும் நிலநடுக்கம்

புவியின் மேற்பரப்பு டெக்டோனிக் தட்டுகள் என அழைக்கப்படுகின்றன. இதில்தான் உலகின் நிலப்பரப்பு, கடல்பரப்பு என அனைத்துமே உள்ளது. பூமியில் இது போல மிகப்பெரிய 7 டெக்டோனிக் தட்டுகள் உள்ளன. அதுபோல பல சிறிய தட்டுகளும் உள்ளன. இந்த டெக்டோனிக் தட்டுகள் எப்போதும் சிறிய அளவில் நகர்ந்துகொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. அவ்வாறு இந்த மேற்பரப்பு தட்டுக்கள் நகரும்போது விளிம்புகள் மோதிக்கொள்வதால் நிலநடுக்கம் ஏற்படுகின்றன.

பூகம்பம் ஏற்படும்போது பூமியின் கீழே உள்ள இடம் ஹைப்போசென்டர் என்றும், பூமியின் மேற்பரப்பில் அதற்கு நேர் மேலே உள்ள இடம் எபிசென்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு இரண்டு மேலடுக்கு டெக்டோனிக் தட்டுகள் உராய்ந்துகொள்ளும் இடத்தில் உள்ள நாடுகளில் நிலநடுக்க வாய்ப்புகள் அதிகம். துருக்கி, சிரியா உள்ளிட்ட நாடுகள் ஆப்ரிக்கா, அரேபியா, யுரேசியா டெக்டோனிக் தட்டுகள் மற்றும் அனட்டோலியன் தட்டும் சந்தித்துக்கொள்ளும் இடத்தில் இருப்பதால், இது நிலநடுக்க வாய்ப்புகள் அதிகமுள்ள பகுதியாகவே உள்ளது. 2020-ல் மட்டும் துருக்கியில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 332 நிலநடுக்கங்கள் 4 ரிக்டர் அளவுக்கும் அதிகமானவை.

துருக்கி நிலநடுக்கம் காரணம் என்ன?
துருக்கி நிலநடுக்கம் காரணம் என்ன?நில அதிர்வுகள்

தற்போது அரேபியன் தட்டும், அனட்டோலியன் தட்டும் உரசிக்கொண்டதால்தான் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் தென்கிழக்கு மற்றும் சிரியாவின் வடக்குப் பகுதியில் நிலநடுக்கம் எகிப்து, இஸ்ரேல், ஜோர்டான், ஈராக், ஜார்ஜியா, லெபனான், கிரீன்லாந்து, சிப்ரஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னர் அந்த நாட்டில் 1939-ம் ஆண்டில் 8 ரிக்டர் அளவில் மிகக்கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 33 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதேபோல 1999-ம் ஆண்டிலும் 7.4 ரிக்டர் அளவில் துருக்கியில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 17 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். தற்போது துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1900 ம் ஆண்டுமுதல் துருக்கியில் ஏற்பட்ட எழுபதுக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களால் சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது நெஞ்சை உருக்கும் செய்தி.

துருக்கி நிலநடுக்கம் உலகிற்குச் சொல்லும் பாடம்!

பூமியின் டெக்டோனிக் தட்டுகள் ஒன்றுடன் ஒன்றும் உராயும் இடத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் நிலநடுக்க பாதிப்பு அபாயத்துடன் உள்ளன. நிலத்தட்டுகள் தொடர்ந்து மிகச்சிறிய அளவில் நகர்ந்துகொண்டே இருப்பதாலும், புவியின் 15 முதல் 50 கி.மீ ஆழம் வரையிலான ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதாலும் அதனை முன்கூட்டியே கணிக்கும் முறைகள் எதுவும் உலகில் இல்லை. எனவே, நிலநடுக்க அபாயம் இருக்கும் பகுதிகளில் உள்ள நாடுகள், பூகம்பத்தை எதிர்கொள்ளும் வகையிலான கட்டுமானங்களை ஏற்படுத்திக்கொள்வதே பேரழிவுகளின் கோரத்தை தணிப்பதற்கான முக்கியமான வழி என்று சூழலியல் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

துருக்கி நிலநடுக்கம்
துருக்கி நிலநடுக்கம்

துருக்கியின் துயரம் பற்றியும், அது உலகுக்குச் சொன்ன பாடம் பற்றியும் நம்மிடம் பேசினார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த புவியியலாளர் லோகேஷ் பார்த்திபன்.

“ 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகமே ஒரே கண்டத்தட்டாக இருந்துள்ளது. அதன்பின்னர் அது இரண்டாக உடைந்து வடக்கு மற்றும் தெற்கு என இரு கண்டத்தட்டுகள் உருவானது. அப்போது தெற்கு கண்டத்தட்டில் இந்தியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா, தென் அமெரிக்கா ஆகியவை இருந்தன. வடக்கு கண்டத்தட்டில் ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகியவை இருந்தன. அதன்பின்னர் தொடர்ந்து நடந்த புவியியல் மாற்றங்கள் காரணமாக, கண்டத்தட்டுகள் மேலும் உடைந்தன. இப்போதும் இந்திய கண்டத்தட்டு, ஆசியத் தட்டுடன் மோதிக்கொண்டேதான் உள்ளது, இதனால்தான் இமயமலையே உருவானது.

கண்டத்தட்டுகள் எனப்படும் டெக்டோனிக் தட்டுகள் மோதிக்கொள்ளும் இடத்தில்தான் நிலநடுக்கங்கள் அதிகளவில் ஏற்படுகின்றன. தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட துருக்கியில் மூன்று கண்டத்தட்டுகள் சந்திக்கும் இடத்தில் அனட்டோலியன் தட்டு எனும் சிறிய தட்டு ஒன்றும் உள்ளது. அந்த தட்டில்தான் துருக்கி, சிரியா போன்ற நாடுகள் உள்ளது. தற்போது அனட்டோலியன் தட்டு, அரேபியன் தட்டுடன் உராய்ந்ததால்தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கி, ஜப்பான், இந்திய இமயமலை பகுதிகள், அமெரிக்காவின் சான் ஆண்ட்ரியோஸ் போன்ற பகுதிகள் பூமியில் நிலநடுக்க அபாயம் அதிகமுள்ள பகுதிகளாக உள்ளது. அதனால்தான் இமாலயப் பகுதிகள் நிலநடுக்க அபாயம் கொண்டவையாக உள்ளது.

லோகேஷ் பார்த்திபன்
லோகேஷ் பார்த்திபன்பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

டச்சு வானியல் ஆய்வாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் வெளியிட்ட முன்கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆகஸ்ட் ஹைதியில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வானியல் கோள்களில் ஒரு குறிப்பிடத்தக்க அலைன்மென்ட் ஏற்பட்டது. அதேபோல இப்போதும், பிப்ரவரி 4-ல் சூரியன், வீனஸ், ஜூபிடர் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வந்தன. பிப்ரவரி 5-ல் சூரியன், மெர்குரி, யுரேனஸ் ஒரே நேர்க்கோட்டில் வந்தன. பிப்ரவரி 6-ல் சூரியன், புவி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வந்தன. அதனை அடிப்படையாகக் கொண்டே ஆய்வாளர் கூகர்பீட்ஸ் இந்த நிலநடுக்கத்தை கணித்துள்ளார். இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயம்தான்.

உலகளவில் உள்ள நிலப்பகுதிகள் நிலநடுக்க அபாயத்தின் அடிப்படையில் 5 மண்டலங்களாக உள்ளது. ‘மண்டலம் 5’ என்பது மிக அதிக நில நடுக்க ஆபத்து உள்ள பகுதியாக உள்ளது. துருக்கி, இந்தியாவின் இமயமலைப் பகுதிகள் போன்றவை ‘மண்டலம் 5’ ல் வருபவை. ஜோஷிமத் மற்றும் காஷ்மீரின் தோடா எனும் பகுதிகள் ஆகியவை இந்த மண்டலத்தில்தான் வருகிறது. இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் காரணமாகவே இப்போது அது புதையும் நகரமாக மாறியுள்ளது.

ஏற்கெனவே உலகில் நில நடுக்க அபாயம் உள்ள பகுதிகள் குறித்து பல்வேறு சட்டதிட்டங்கள், வழிகாட்டுதல்கள் உள்ளன. நிலநடுக்க அபாயமுள்ள ‘மண்டலம் 5’ மற்றும் ‘மண்டலம் 4’ ல் அதற்கேற்ற கட்டுமானங்களையே உருவாக்க வேண்டும். ஆனால், உலகமயமாக்கலுக்குப் பின்னர் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான கட்டுமானங்களை ஏற்படுத்துவதால் இத்தகைய பேரழிவுகள் தொடர்கதையாகின்றன.

துருக்கி என்பது தொடர்ந்து நிலநடுக்க பாதிப்புகள் உள்ள பகுதி. 1999-ல் கூட அங்கே மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கே இதுபோன்ற வானளாவிய கட்டுமானங்களை கட்டியதே தவறு. அதுவே பேரழிவின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. இந்தியாவிலும் குஜராத் மற்றும் இமயமலைப்பகுதிகளில் நிலநடுக்க அபாயத்தை சமாளிக்கும் வகையில் கட்டுமானங்களை உருவாக்க வேண்டும். காலநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு பேரிடர்கள் ஏற்படுகின்றன. இது இனிவரும் காலங்களில் இன்னும் தீவிரமாகும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதனை எதிர்கொள்ளும் வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலகநாடுகள் ஏற்படுத்தவேண்டும்” என்றார் லோகேஷ் பார்த்திபன்.

துருக்கி நிலநடுக்கம்
துருக்கி நிலநடுக்கம்சிரியா நிலநடுக்கம்

சமீபத்திய வருடங்களில் உலகில் அதிகமான நிலநடுக்கம், வெப்ப அலை, குளிர் அலை, வெள்ளம், கனமழை, வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் அதிகளவிலான உயிரிழப்புகளும், பொருளிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே நிலநடுக்கம், நிலச்சரிவு உள்ளிட்ட சூழல் அபாயங்கள் உள்ள பகுதிகளுக்கேற்ற கட்டுமானங்களை அந்தந்த நாடுகளின் அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இந்தியாவிலும் நிலநடுக்க அபாயமுள்ள பகுதிகளில், அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும்.

துருக்கியில் நிலநடுக்கம் நடந்து ஒரு வாரம் ஆகியும், சுமார் 50 நாடுகள் உதவிக்கரம் நீட்டியும், மீட்புப்பணிகள் மிக மந்தமாக உள்ளது. இதற்குக் காரணம், போர்களை எதிர்கொள்ள தங்கள் வீரர்களுக்கு மிகத்தீவிரமாக பயிற்சியளிக்கும் உலக நாடுகள், பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சியளிப்பதில்லை. இனி வரும் வருடங்கள் பேரிடர்கள் சூழ்ந்த காலமாகவே இருக்குமென்பதால், ஒவ்வொரு நாடும் அதற்கான பிரத்யேக பிரிவினை உருவாக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

பேரிடர்களே உலகுக்கு முக்கிய பாடங்களை உணர்த்துகின்றன. அந்த வகையில் துருக்கியின் துயரம், உலக நாடுகளுக்கான எச்சரிக்கை மணி. இந்தியாவில் ஜோஷிமத் நகரம் மண்ணுக்குள் புதைந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இது நமக்குமான முக்கிய எச்சரிக்கைதான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in