துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி 4 நாட்கள் சிறுநீரைக் குடித்து உயிர் பிழைத்த இளைஞர் - 25 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கம்
துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கம்4 நாட்கள் சிறுநீரைக் குடித்து உயிர் பிழைத்த இளைஞர்

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய பேரழிவு நிலநடுக்கத்தை அடுத்து, துருக்கியின் காசியான்டெப் நகரில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 17 வயது இளைஞர் நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார்.

துருக்கியின் காசியான்டெப் நகரைச் சேர்ந்த அட்னான் முஹம்மத் கோர்குட், 94 மணிநேரம் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். நிலநடுக்கம் ஏற்பட்டபோது அவர் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார், பின்னர் அவர் கருவில் குழந்தை இருப்பது போன்ற நிலையில் 94 மணி நேரம் தவித்துள்ளார். மீட்கப்பட்ட பின்னர் பேசிய கோர்குட், " இடிபாடுகளில் சிக்கிக்கொண்டபோது, எனது சிறுநீரைக் குடித்துவிட்டு உயிர்வாழ்ந்தேன். வெளியில் இருந்து குரல்கள் எனக்கு கேட்டன, ஆனால் அவர்களால் எனது குரலைக் கேட்க முடியவில்லை" என்று கூறினார். ஆனால் நான்கு நாட்களுக்குப் பிறகு, அவர் இறுதியாக மீட்கப்பட்டார். அதேபோல, தெற்கு ஹடேயில் நிலநடுக்கம் ஏற்பட்டு 123 மணி நேரத்திற்குப் பிறகு இரண்டு வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

7.8 ரிக்டர் அளவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் இதுவரை 25,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பேரழிவு ஏற்பட்டு 100 மணி நேரத்திற்கும் மேலாகியுள்ள சூழலில் பாதிக்கப்பட்ட சிலர் தொடர்ந்து மீட்கப்படுகிறார்கள். இருப்பினும் நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்களுக்கும் மேலாவதால் இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் சிக்கியுள்ளவர்கள் உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கைகள் மங்கி வருகின்றன. துருக்கியில் 32,000 பேர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 8,294 சர்வதேச மீட்புப் பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in