துருக்கி துயரம்: பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது

துருக்கியில் தரைமட்டமான கட்டிடப் பகுதி
துருக்கியில் தரைமட்டமான கட்டிடப் பகுதி

துருக்கி, சிரியா தேசங்களை நிலநடுக்கம் தாக்கியதன் 10வது நாளிலும் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இரு நாடுகளையும் சேர்த்து சுமார் 40 ஆயிரத்துக்கும் மேலானோர் பலியாகி உள்ளனர்.

பிப்.6 அதிகாலையில் துருக்கி - சிரியா தேசத்தின் எல்லைப்புற நகரங்களை குறிவைத்து தொடர் நிலநடுக்கம் எழுந்தது. நிலத்தடியில் சுமார் 18 கிமீ ஆழத்தில் கண்டறியப்பட்ட பெரும் அதிர்வு, அதன் மேற்பரப்பில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கமாக வெடித்தது. 3 பெரும் நிலநடுக்கங்கள் மற்றும் ஏராளமான தொடர் அதிர்வுகளுக்கும் ஆளானதில் கட்டிடங்கள் தகர்ந்தன. அதிகாலை ஆழ் உறக்கத்திலிருந்த மக்கள், கொத்துக்கொத்தாக இடிபாடுகளில் சிக்கி சமாதியானார்கள்.

அடுத்து வந்த நாட்களிலும் நிலநடுக்க பீதி துருக்கி தேசத்தை பீடித்து வருகிறது. சிரியாவைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான பாதிப்புக்கு துருக்கி ஆளாகி உள்ளது. நிலநடுக்கம் நிகழ்ந்தன் 10வது நாளான இன்று காலை கணக்குப்படி, துருக்கியில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் மேலானோர் பலியாகி இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை சிரியாவில் 5 ஆயிரத்துக்கும் மேலாக உள்ளது. இரு நாடுகளையும் சேர்த்து காயமுற்றோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

மருத்துவ மற்றும் உணவுப்பொருள் தட்டுப்பாடு, உறைநிலையில் உறுத்தும் குளிர், தொடரும் நிலநடுக்க அச்சம் ஆகியவற்றின் மத்தியில் தவித்து வரும் துருக்கிக்கு, இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அத்தியாவசியப் பொருட்களாகவும், கள உதவிகளாகவும் கைகொடுத்து வருகின்றன. இதற்கிடையே துருக்கியின் நிலநடுக்க துயரத்தின் பின்னணியில், கட்டிடங்களை வடிவமைத்தவர்களின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களில் பலரும் நாட்டைவிட்டு ரகசியமாக வெளியேற, நூற்றுக்கும் மேலானோர் வளைக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களில் ஒரு சிலர் உயிரோடு மீட்கப்பட்டு வருவதால், நம்பிக்கையோடு மீட்பு பணிகளும் முழுவீச்சில் தொடர்ந்து வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in