நம்பர் பிளேட் விவகாரத்தில் டிடிஎஃப்.வாசன் வாகனம் பறிமுதல்

நம்பர் பிளேட் விவகாரத்தில் டிடிஎஃப்.வாசன் வாகனம் பறிமுதல்

நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்ததால், வாகனத்தை பறிமுதல் செய்ததோடு யூடியூபர் டிடிஎப்.வாசனுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதமும் விதித்தனர்.

எம்.பி என்டர்டெயின்மென்ட் - சரத் - பிரவீன் தயாரிப்பில், இயக்குநர் ஜெய் அமர்சிங் இயக்கத்தில், லிங்கேஷ் நடிப்பில் உருவான படம் காலேஜ் ரோடு. இதன் சிறப்பு காட்சியாக சென்னை வடபழனி கமலா திரையரங்கில் இன்று காலை  திரையிடப்பட்டது. இதற்காக நடிகர் லிங்கேஷ் மற்றும் யூடியூப் புகழ் டிடிஎப்.வாசன் ஆகியோர் இன்று கமலா திரையரங்கிற்கு வந்தனர். 

வாசன் வந்த வாகனம்
வாசன் வந்த வாகனம்

டி.டி.எப் வாசனுக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்கு வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திரையரங்கிற்கு டி.டி.எப் வாசன் வந்து இறங்கிய வெள்ளை நிற மகேந்திரா காரில் நம்பர் பிளேட் இல்லாதது சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து தகவலறிந்து வந்த கோடம்பாக்கம் போக்குவரத்து போலீஸார், டிடிஎப் வாசன் வந்த நம்பர் பிளேட் இல்லாத காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் டிடிஎப் வாசன் ஓட்டி வந்த நம்பர் பிளேட் இல்லாத கார் அவரது நண்பர் பிரவீனுக்கு சொந்தமானது என்றும், கர்நாடக மாநிலத்தில் வாகன பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும் வாகனப் பதிவுக்காக காத்திருக்கும் வாகனம் என்று ஒட்டப்பட்டிருந்த தகவல் உடைந்து விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முறையான நம்பர் பிளேட் இல்லாமல் வந்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டு, ரூ.500 அபராத விதிப்புக்கு வாசன் ஆளானார்.  

இது குறித்து தன்னிலை விளக்கம் தந்த டிடிஎப் வாசன், ’ரசிகர்கள் தொல்லை காரணமாக நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்ததாக’ தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in