கணவர் மீது சரமாரி வெட்டு; இரவில் அலறிய மனைவி: நகைக்காக கொள்ளையர்கள் அட்டூழியம்

கையில் காயத்துடன் மோகன்
கையில் காயத்துடன் மோகன்

நாகை அருகே அழிஞ்சமங்கலத்தில் பெண்ணின்  கழுத்தில் கத்தியை வைத்து நகையை பறிக்க  முயன்றபோது  தடுத்த கணவரை கொள்ளையர்கள்  கத்தியால் வெட்டியதில்  பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

நாகை மாவட்டம் சிக்கலை அடுத்த சங்கமங்கலத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் தனது மனைவி ஷாம்லி மற்றும் குழந்தையோடு நாகையில் இருந்து செல்லூர் வழியாக சங்கமங்கலத்திற்கு நேற்று இரவு  தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அழிஞ்சமங்கலம் சுடுகாடு அருகே ஸ்கூட்டியில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மோகனின் வாகனத்தை  வழிமறித்துள்ளனர். 

கத்தியுடன் எதிரேவந்த அவர்கள்  மோகனின் மனைவி ஷாம்லியின்  கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த  நகைகளை கழற்ற சொல்லியுள்ளனர். சுதாரித்துக் கொண்ட மோகன் அவர்களை தள்ளிவிட்டு கூச்சல் போட்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த  கொள்ளையர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியால் மோகனை  வெட்டியுள்ளனர். மேலும் அவரது மனைவி மற்றும் குழந்தையையும் கீழே தள்ளி விட்டுள்ளனர். 

அவர்கள் கூச்சலிட்டு கத்தவே மோகனை மேலும்  சரமாரியாக  வெட்டிவிட்டு அங்கிருந்து  தப்பி ஓடியுள்ளனர். இதில் மோகனுக்கு இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.  இதுகுறித்து அவர் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து நகையை பறிக்க முயன்றதும்,  தடுத்தவரை வெட்டிய சம்பவமும் அப்பகுதி பொது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாகை வெளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in