
திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான முக்கொம்பு காவிரி மேலணைக்கு திருச்சி தெப்பக்குளம் பிஷப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்கள் 16 பேர் சுற்றிப் பார்ப்பதற்காக இன்று சென்றனர். அணையைப் பார்த்துவிட்டு அப்படியே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். தற்போது மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் காவிரியில் குறைந்த அளவு நீரே வந்து கொண்டிருந்தது.
இந்த தண்ணீரில் குதித்து விளையாட திட்டமிட்ட மாணவர்கள் காவிரியின் நடுப்பகுதிக்குச் சென்று குளித்து மகிழ்ந்தனர். ஒரு கட்டத்தில் ஆழம் நிறைந்த பகுதியில் சென்று குளித்தபோது அதில் கௌதமன் என்ற மாணவன் மட்டும் புதைமணலில் சிக்கி தடுமாறியுள்ளார். சக மாணவர்கள் கௌதமனை மீட்க முயற்சித்தும் முடியாத நிலையில், கத்தி கூச்சலிட்டனர்.
இதையடுத்து அங்கு அக்கம் பக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த வாலிபர்களும், தீயணைப்புத் துறையினரும் ஒருசேர வந்து கௌதமை மீட்க முயற்சி செய்தனர். நீண்ட நேரமானதால் தண்ணீருக்குள் மூழ்கி பலியான நிலையில் கௌதமனைப் பிரேதமாகத் தான் மீட்க முடிந்தது. உயிரிழந்த மாணவன் கௌதமன் திருச்சி மார்க்கெட் அருகே உள்ள மரக்கடை பகுதியைச் சேர்ந்தவர்.
அப்பகுதியில் சென்று குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினரும், காவல்துறையினரும் அறிவுறுத்தினாலும் அங்கு வரும் பலரும் அதைக் கேட்காமல் குளிப்பதால் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
அதனால் முக்கொம்பு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலமாக தொடர்ந்து இதுகுறித்த எச்சரிக்கை விடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.