நாளை முதல் பழைய நேரத்திற்கே மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கும்: அதிகாரிகள் அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி

நாளை முதல் பழைய நேரத்திற்கே  மயிலாடுதுறை -  திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கும்: அதிகாரிகள் அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு காலை நேரத்தில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் அதன் பழைய நேர அட்டவணைப்படியே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மயிலாடுதுறை இருந்து காலை 8:15 க்கு திருச்சிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி  ஆகிய ஊர்களுக்கு அலுவலகங்களுக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள்,  மருத்துவமனைக்குச் செல்பவர்கள் ஆகியோருக்கு இந்த ரயில்  மிகப்பெரிய உதவியாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்த ரயில் அட்டவணை மாற்றப்பட்டது. அதன்படி  8.15 மணிக்கு பதிலாக 8 35மணிக்கு புறப்பட்டது. அதனால் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிகள்,   அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். 

இதனால் இந்த ரயிலை பழையபடி 8.15  மணிக்கே ரயிலை  இயக்க வேண்டும் என்று மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று நாளை (நவ.23) முதல் மீண்டும் பழைய நேர அட்டவணைப்படியே  ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

எனவே மீண்டும் பழையபடி தினசரி காலை 8.15 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்படும் இந்த ரயில் 10.40  மணிக்கு திருச்சியைச் சென்றடையும்.  மீண்டும் திருச்சியில் மதியம்12 .50 மணிக்கு புறப்பட்டு  மயிலாடுதுறைக்கு  3.20 மணிக்கு வந்து சேரும்.

பயணிகள் அதிகம் பயன்படுத்தும் எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்பாட்டை  மீண்டும் பழைய நேரத்திற்கு மாற்றித் தந்த   திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை பகுதி  ரயில் உபயோகிப்பாளர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in