700 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள்: அமர்க்களமாக தொடங்கியது சூரியூர் ஜல்லிக்கட்டுப்போட்டி!

700 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள்: அமர்க்களமாக தொடங்கியது சூரியூர் ஜல்லிக்கட்டுப்போட்டி!

மதுரை மாவட்ட  ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இணையான புகழ் பெற்ற திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை  தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு போட்டி என்றால் அது  திருவெறும்பூர் அருகேயுள்ள  சூரியூரில்  நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிதான். பெரிய சூரியூர் கிராமத்தில் உள்ள  நற்கடல் குடி கருப்பண்ண சுவாமி கோயில்  திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதில் கலந்துகொள்ள காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பெரும் ஆர்வம் காட்டுவார்கள். 

மாட்டுப் பொங்கல் தினமான இன்று காலை 7.45 மணியளவில்  திருச்சி மாவட்ட கலெக்டர் மா பிரதீப்குமார் பச்சைக்கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.  இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த  700 காளைகள்  பங்கேற்கிறது. 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.  பார்வையாளர்களாக சுமார் 5 ஆயிரம் பேர் குவிந்துள்ளனர். 

முதல் காளையாக கருப்பணசாமி கோயில் காளையும், அடுத்ததாக அம்மன் கோயில் காளையும்  அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து  தனி நபர்களின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.  இதில் பிடிபடாத சிறந்த காளைகளுக்கு சிறப்பு பரிசுகளும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதல் பரிசாக பைக் இரண்டாவது பரிசாக பிரிட்ஜ், வாஷிங் மெஷின்,  தங்க மோதிரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 

மதியம் 2 மணி வரை போட்டி நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சி சார்பாக  ஊர் முழுவதும் சுகாதார வசதிக்காக கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மொபைல் டாய்லெட் வசதி,  டேங்கர் லாரி மூலம் குடிநீர் வசதி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றுவரும் பகுதியில்  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில்  திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் உள்ளிட்ட 435 போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கால்நடைகளை பரிசோதனை செய்யவும், மருத்துவ சிகிச்சை அளிக்கவும் கால்நடைத்துறை இணை இயக்குநர் டாக்டர் மருதைராஜு  தலைமையிலான மருத்துவக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர். காயம் பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க டாக்டர் பாலாஜி தலைமையிலான மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in