`சுயநலமாக இல்லாமல் குடும்ப நலம் விரும்பும் நபராய் இருங்கள்'- கைகூப்பி கேட்டுக்கொள்ளும் கலெக்டர்

திருச்சி ஆட்சியர் மா . பிரதீப்குமார்
திருச்சி ஆட்சியர் மா . பிரதீப்குமார்

திருச்சியில்  மிக வேகமாக பரவி வரும் விஷக்காய்ச்சலை தொடர்ந்து பொதுமக்கள்  அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  ' திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை  92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டைவிட இது 50 சதவீதம் கூடுதல்.  H1N1 ஸ்வின்  ப்ளூ வைரஸ் தொற்று காய்ச்சல் சிறு பிள்ளைகளுக்கு  மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சிறுபிள்ளைகளிடமிருந்து பெரியோர்களுக்கும் அதிகமாக பரவி வருகிறது. மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் இது இன்னும் அதிவேகமாக பரவ வாய்ப்பு உள்ளதால் அனைவரும் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்படுகின்றனர். தொண்டை வலி,  உடல்வலி,  அதிக காய்ச்சல், ஜலதோஷம், தும்மல்,  இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கும் இந்த வைரஸ் பரவாமல் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கூடவே கரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு நான்கைந்து என இருந்த கரோனா தொற்று தற்போது தினசரி 18க்கு மேல் பதிவாகி வருகிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் நம்முடைய அலட்சியம் தான். கரோனா நம்மை விட்டு முற்றிலும் அகன்று போய் விட்டது,  எனவே யாரும் முகக் கவசம் அணிய வேண்டாம், தனிநபர் இடைவெளி கடைபிடிக்க வேண்டாம் என்று இதுவரை எந்த ஒரு அரசாங்க ஆணையும் வரவில்லை.

ஆனால் மக்களாகிய நாம்,  நாமாக முடிவெடுத்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறோம் என்று சொல்லி சுகாதாரம் இல்லாமல், சுத்தம் இல்லாமல், பராமரிப்பு இல்லாமல் முகக் கவசம் அணியாமல் அதிக கூட்டம் உள்ள இடங்களுக்கு சென்று கரோனாவை பரப்பியும் விடுகிறோம், நாமும் பெற்றுக் கொள்கிறோம். கரோனா நோய் தொற்றுக்கு நிரந்தர மருந்து இல்லாத காரணத்தால் இன்னும் நோயாளிகள் இறந்து கொண்டிருப்பதால் தயவுசெய்து உயிர் இழப்புகளை தவிர்க்க  மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நம்முடைய குடும்ப நலன் கருதியும்,  சமுதாய நலன் கருதியும்  கரோனாவை முற்றிலும் அழித்திட தனிமனித இடைவெளியை  கடைபிடிக்குமாறும், முகக் கவசம் அணியும்படியும், அடிக்கடி சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும் உங்களை அன்போடு மாவட்ட நிர்வாகம் கைகூப்பி கேட்டுக்கொள்கிறது. நம்மிடமிருந்து முதியோர்களுக்கு பரவும்போது முதியோர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் கம்மியாக இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே நாம் சுயநலமாக இல்லாமல் நம்மால் நம் குடும்பத்தில் உள்ள யாருக்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்ற ஒரு குடும்ப நலம் கருதும் நபராய் இருந்து தனிமனித இடைவெளி மற்றும் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்து நமக்கு வராமலும் நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கவும் உதவுவோம். அதிகப்படியான காய்ச்சல், இருமல், தும்மல் உள்ள பிள்ளைகள் உடல்நிலை சரியாகும் வரை பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து தேவையான சிகிச்சை பெற்றுக் கொண்டு பள்ளிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதனால் நம்மிடமிருந்து மற்ற பிள்ளைகளுக்கு பரவுவதை நாம் தவிர்க்கலாம்" என்று  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in