பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டது திருச்சி காவிரி பாலம்: போக்குவரத்து அதிரடி மாற்றம்

பழுதடைந்த பாலம்
பழுதடைந்த பாலம்

திருச்சி காவிரி ஆற்று பாலம் பராமரிப்பு பணிகளுக்காக நேற்று நள்ளிரவு முதல் மூடப்பட்டது.

திருச்சி காவிரி பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. இரண்டு சக்கர வாகனங்கள் கூட மிகவும் சிரமப்பட்டே அப்பாலத்தில் பயணிக்கின்றன. கடந்த மூன்று மாத காலமாக காவிரி பாலத்தை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினர் திட்டமிட்டு வந்தனர்.

இந்நிலையில் முதலில் ஆடிப்பெருக்கு விழா வந்ததால் காவிரி பாலம் மூடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதற்கடுத்ததாக காவிரியில் அதிக அளவு நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மூடுவதைத் தள்ளி வைத்தனர்.

அத்துடன் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றதால் விநாயகர் சிலைகள் காவிரி பாலத்தில் வைத்து கரைக்கப்பட்ட நிலையில் அதுவரையிலும் பாலத்தை மூட இயலாத நிலை உருவானது. தற்போது காவிரி கரையில் இனி பொது மக்களுக்கு அதிகம் வேலையிருக்காது என்ற நிலையில் முன்னரே அறிவிப்பு கொடுக்கப்பட்டு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் காவிரி பாலம் மூடப்பட்டுள்ளது.

காவிரி பாலம்
காவிரி பாலம்

இதனையடுத்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய காவிரி பாலத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டடுள்ளன. பாலத்தின் ஓரத்தில் இரண்டு மீட்டர் அளவிற்கு இடைவெளி விடப்பட்டு அதன் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே காவிரி பாலத்தில் அனுமதிக்கப்படுகிறது. மற்ற வாகனங்கள் அனைத்தும் வேறு மார்க்கமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக ( காவிரி தென் கரை சாலை ) சென்னை பையாஸ் சாலை பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை ( காவிரி இடது கரை சாலை) வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி ட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக சென்னை பைபாஸ் சாலையை அடைந்து பழைய பாலம், ஓயாமரி வழியாக அண்ணாசிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம் .

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ .1 . டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம் . அவ்வாறே சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1.டோல்கேட் சென்று செல்லலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

பராமரிப்புப் பணிகளை விரைந்து செய்து முடித்து மீண்டும் காவிரி பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு சீக்கிரமாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in