முதல்வர் ஸ்டாலின் வரும் நேரத்தில் முடக்கப்பட்ட சாலை: பரபரப்பான திருச்சி

முதல்வர் ஸ்டாலின் வரும் நேரத்தில் முடக்கப்பட்ட சாலை: பரபரப்பான திருச்சி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிக்கு வந்துள்ள நிலையில் திருச்சி ஆட்சியர் அலுவலக சாலையை முடக்கி  போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு  வழங்கப்பட்டு வந்த பஞ்சபடி 2016-ம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை.  அதனை மீண்டும் வழங்கக் கோரி அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்தபிறகு அவர்களுக்கு பஞ்சப்பட்டி வழங்கப்படும் என்று சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவால்  அறிவிக்கப்பட்டிருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்த பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அது  வழங்கப்படவில்லை.  எனவே இதனை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில்  உள்ள அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

முதல்வர் திருச்சிக்கு வந்திருக்கும் நிலையில்  அவர் மணப்பாறை செல்லும் வழியின் அருகே அமைந்திருக்கும் திருச்சியின் முக்கிய சாலையில் போக்குவரத்து முடங்கியதை அறிந்த போலீஸார் உடனடியாக அங்கு விரைந்தனர். போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை  கைவிடச் செய்து அவர்களை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து மீண்டும் சீரானது. முதல்வர் வரும் நேரத்தில் முடக்கப்பட்ட முக்கிய சாலையால்  அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in