சிறந்த விமான நிலையமாக திருச்சி தேர்வு: அசத்தல் காரணம் இதுதான்!

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக திருச்சி தேர்வு: அசத்தல் காரணம் இதுதான்!

பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்குவது உள்ளிட்ட சேவைகளுக்காக திருச்சி விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இன்று திருச்சி விமான நிலைய இயக்குநர் சுப்ரமணி கூறுகையில், "ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் 2 மில்லியன் பயணிகளை கையாளும் விமான நிலையங்களின்  பட்டியலில் பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்குவது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்படும் விமான நிலையங்கள் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அதில்  சிறந்த விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  விமான நிலைய சேவை மற்றும் தரத்தினை ஆய்வு செய்யும் தன்னாட்சியான அமைப்பு நடத்திய ஆய்வில்  2022-ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாவது முனையம் செப்டம்பர் மாதத்தில் பணிகள் நிறைவடையும். இரண்டு மில்லியன் பயணிகளை கையாண்ட விமான நிலையங்களில் சிறந்த பரிசு பெற்ற திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகமான பயணிகள் சென்றுள்ளனர்.

விமான நிலைய அதிகாரிகளுடன் சுப்ரமணி
விமான நிலைய அதிகாரிகளுடன் சுப்ரமணி

தற்போது டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, சென்னைக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மும்பைக்கு புதிதாக விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை செயல்பாடுகளில் குறைகள் உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. விரைவில் குறைகள் களையப்படும். விமான ஓடுதள விரிவாக்க பணிகளுக்காக 345 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு தற்போது வரை 41 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி விமான  நிலைய கார்கோ  மூலம் நாளொன்றுக்கு 20 மெட்ரிக் டன் சரக்கு கையாளப்படுகிறது. கடந்தாண்டு 1.72 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்ட நிலையில் இவ்வாண்டு இதுவரை 1.03 மில்லியன் சரக்கு கையாளப்பட்டு வருகிறது. கடந்தாண்டை விட இவ்வாண்டு கூடுதலாக சரக்கு கையாள வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in