
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட 14வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் நிறைவு நாள் விழா இன்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநில ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பங்கேற்றார்.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் பிரதாப்குமார், நேருயுவ கேந்திராவின் மாநில இயக்குனர் செந்தில்குமார், பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவு நாள் விழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பழங்குடி மாணவர்கள் இந்நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், நடனப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது, "மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் 14வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக கோவையில் நடைபெற்றுள்ளது. இதில் பீகார், ஜார்க்கண்ட் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் தமிழகத்தின் கலாச்சாரத்தையும், தொழில்துறையில் அமல்படுத்தியுள்ள தொழில் நுட்பங்கள் குறித்து தெரிந்து கொண்டனர். அதேபோல் அவர்களது பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்தும் பகிர்ந்தனர்.
பழங்குடியினர் பல்வேறு பிரிவுகளாக வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களிலும் பல பிரிவுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் மொழி, தொழில், கலாச்சாரம் ஆகியவை வேறுபடும். இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் கலாச்சாரங்கள் வேறுவேறாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர் என்ற எண்ணம் மேலோங்கும்.
பழங்குடியினர் முன்பு மலைகளில் மட்டுமே வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மற்ற இடங்களுக்கும் சென்று வாழ்ந்து வருகின்றனர். இதனால் சாதி சான்றிதழ் வழங்குவதில் தொய்வு ஏற்படுகிறது. இருந்தும் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலம் வழங்கவும், அவர்களது பெற்றோர்களின் சாதி சான்றிதழ் அடிப்படையிலும், ரத்த பந்தங்களின் சான்றிதழ் அடிப்படையிலும், பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் பேசினார்.