ராமஜெயம் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ரவுடிகள்: உண்மை கண்டறியும் சோதனைக்கு எதிர்ப்பு

ஆஜராக வந்தவர்கள்
ஆஜராக வந்தவர்கள்

ராமஜெயம் கொலை வழக்கில் தமிழ்நாட்டின் பிரபல ரவுடிகள் 12 பேர்  இன்று திருச்சி  நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில்  நவம்பர் 7-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சிக்குச் சென்றபோது, ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி கல்லணை சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான குழு விசாரணை செய்து வரும் நிலையில் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 13 பேருக்கு  திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இதன் அடிப்படையில் மோகன்ராம், தினேஷ் , நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சீர்காழி சண்முகம் , சிவ குணசேகரன் உள்பட 12 பேர் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் இன்று ஆஜராகினர். 

அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு அவர்களின் வழக்கறிஞர்கள் தரப்பில் மறுப்பு தெரிவித்து எதிர் கேள்விகள் கேட்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை எதிர்வரும் 7- ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து 13 பேரில் ஒருவரான மோகன்ராமின்  வழக்கறிஞர் அலெக்ஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,  அப்போது அவர்.  " அரசியல் காரணங்களுக்காகவே 13 பேரை மட்டும்  அழைத்துள்ளனர். உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்ற அனுமதியை எஸ்.பி ஜெயக்குமார்தான் கோர முடியும் என்ற  நிலையில் அதற்கு மாறாக ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் டிஎஸ்பி  அனுமதி வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார்.  இது உயர்நீதிமன்ற வழிக்காட்டுதலுக்கு எதிரானது. எனவே, இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி மீண்டும் மனு தாக்கல் செய்ய வேண்டும். வரும் 7-ம் தேதி மீண்டும் அனைவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

மேலும் "ராமஜெயம் மது அருந்தும் பழக்கமில்லை என குடும்பத்தார் கூறியுள்ளனர், ஆனால் அவருக்கு மது அருந்தும் பழக்கமுள்ளது என சிபிஐ விசாரணை அறிக்கையிலும், பிரேத பரிசோதனை அறிக்கையிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, முதலில் அவர் குடும்பத்தினரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்"  என்றார்.

இதன் காரணமாக ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in