சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரை வீட்டுக்கு தேடிப்போன கருவூல அதிகாரி!- என்ன காரணம் தெரியுமா?

பொன்னீலன்
பொன்னீலன்

அரசுப்பணி செய்து ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்வு சான்றிதழை சமர்பிக்க வேண்டும். அந்த சான்றிதழை சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலனும் சமர்பிக்க வேண்டியநாள் வந்தது. வயோதிகத்தில் இருக்கும் படைப்பாளியை மாவட்ட கருவூலம் வரை அழைப்பது மரியாதையாக இருக்காது என தானே அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்வு சான்றிதழ் பெற்றுத் திரும்பியிருக்கிறார் கன்னியாகுமரி மாவட்ட கருவூல அலுவலர் காஜா நசீம்!

முதியோர்களுக்கு வாழ்வுரிமை சான்று வழங்கும் வழிமுறைகள் இப்போது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலனுக்கும் வாழ்வு சான்றிதழ் சமர்பிக்கவேண்டி வந்தது. பொன்னீலன் எழுத்தாளர் மட்டுமல்ல, மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

பொதுவாகவே தமிழ்நாடு அரசுப்பணியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கருவூல அலுவலகத்திற்குச் சென்று தங்கள் வாழ்வு சான்றிதழை சமர்பிக்க வேண்டும். இதற்கென கருவூலத்தில் இருந்து ஒரு பணியாளர் பொன்னீலனின் இல்லத்திற்கே சென்றார். ஆனால் வயோதிகத்தின் காரணமாக பொன்னீலனின் கைரேகை, ஆதார் தகவல்களுடன் ஒத்துப்போகவில்லை. தொடர்ந்து பேஸ் ஆப் மூலம் வாழ்வு சான்று வழங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதுவும் தோல்வியில் முடிந்தது.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் வயோதிகத்தில் இருப்பதை அறிந்த மாவட்ட கருவூல அதிகாரி காஜா நசீம், இலக்கியவாதியான எஸ்.கே.கங்காவை அழைத்துக்கொண்டு நேரடியாக பொன்னீலனின் கிராமத்திற்கே சென்றார். அவரது வீட்டிற்கே கோப்புகளைக் கொண்டுபோய், கையெழுத்து வாங்கி வாழ்வு சான்றிதழை சமர்பித்தார். குமரி இலக்கியவாதிகள் மத்தியில் இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in