லட்சக்கணக்கில் லஞ்சப் பணம்… 4 மாதத்துக்கு பிறகு போக்குவரத்து துணை ஆணையர் சஸ்பெண்ட்: அதிரடி காட்டியது தமிழக அரசு!

லட்சக்கணக்கில் லஞ்சப் பணம்… 4 மாதத்துக்கு பிறகு போக்குவரத்து துணை ஆணையர் சஸ்பெண்ட்: அதிரடி காட்டியது தமிழக அரசு!

கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுத் தருவதாகக் கூறி, பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிய போக்குவரத்துத் துறை துணை ஆணையர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்துத் துறை ஆணையரக அலுவலகம் இயங்கி வருகிறது. இதனுடன் இணை மற்றும் துணை ஆணையரக அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் ஆணையர் நடராஜன், தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர்களிடமிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த புகாரின் அடிப்படையில் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 35 லட்சம் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.

சோதனையின் போது 8 பண்டல்கள் என தனித்தனியாக பணம் பிரித்து வைக்கப்பட்டு ஒரு பையில் வைத்து இருந்ததாகவும், ஒவ்வொரு கட்டிலும் போக்குவரத்து துறையில் வேலைபார்க்கும் ஊழியர்கள் பெயர் இருந்ததாகவும், போக்குவரத்துத்துறையில் ஊழியர்களாக பணியாற்றி வரும் மாதேஸ்வரன், பரமசிவன், தசரதன், சாந்தலட்சுமி முருகன், பிரேம்குமார், சாந்தி மற்றும் பெயர் குறிப்பிடாமல் ஒரு கட்டுப்பணம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்துதுறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் சாந்தி பரமசிவன் பிரேம்குமார் ஆகியோர் கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா 5, 4 , 3 லட்ச ரூபாய் என வங்கியிலிருந்து கடன் பெற்று துணை ஆணையர் நடராஜனிடம் அளித்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்துத்துணை ஆணையர் நடராஜனை திருநெல்வேலிக்கு பணிமாற்றம் செய்து தமிழக அரசு உத்தவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கிய நடராஜனை பணிநீக்கம் செய்யாமல் பணியிடமாற்றம் செய்தது சட்டத்திற்கு புறம்பானது என்றும் ஏன் தமிழக அரசு அவரை பணியிடை நீக்கம் செய்யவில்லை என்றும் பல்வேறு கட்சி தலைவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் 4 மாதத்திற்கு பிறகு திருநெல்வேலி போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்ட நடராஜனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in