ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போதையில் பணிபுரிந்தால்... கடுமையாக எச்சரித்த போக்குவரத்துத் துறை!

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போதையில் பணிபுரிந்தால்... கடுமையாக எச்சரித்த போக்குவரத்துத் துறை!

மது அருந்திவிட்டு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது குறித்து அடிக்கடி வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பேருந்து விரைவுப் போக்குவரத்துக்கழகம் அனைத்து கோட்ட மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், " சமீப காலமாக நமது கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சிலர் தங்களது பணியின் போது மது அருந்திய நிலையில் பணிபுரிவதாகப் புகார் பெறப்படுகிறது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும். இது போன்ற சம்பவங்கள் பயணிகளிடையே நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் பயணிகளுக்கு நமது கழகத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. இதனால் அவர்கள் தொடர்ந்து நமது கழகப் பேருந்துகளில் பயணிப்பதைத் தவிர்க்கவாய்ப்புள்ளது.  எனவே, அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியின் போது மது அருந்திய நிலையில் பணி புரியக்கூடாது.

அவ்வாறு பணியின் போது மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு மிக அதிக அளவில் உள்ளது. நமது கழகத்தில் மது அருந்திய நிலையில் பணியில் கண்டறியப்பட்டால் மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை (அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம்) எடுக்கப்படும். எனவே, பணியாளர்கள் மேற்படி குற்றத்திற்கான பின் விளைவுகளை அறிந்து பணியில் ஒழுங்கீனத்திற்கு இடம் கொடுக்காமல் பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in