கடத்திச் செல்லப்பட்ட திருநங்கைகள்: காட்டுப்பகுதியில் வாலிபர்களால் நடந்த கொடுமை: வீடியோவால் சிக்கினர்!

கைது
கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகளைக் கடத்தி அவர்களின் முடியை வெட்டி கொடுமை செய்த இரு வாலிபர்களைப் போலீஸார் கைது செய்தனர். வாட்ஸ் அப்பில் வைரலான வீடியோவால் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள துலுக்கர்பட்டியைச் சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த அனன்யா என்ற தோழி உண்டு. திருநங்கைகளான இவர்கள் இருவரும், துலுக்கர்பட்டி பகுதியில் இருந்து கெச்சிலாபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியைச் சேர்ந்த நோவாபூவன் மற்றும் சங்கரன்கோவிலைச் சேர்ந்த விஜய் இருவரும் வழிமறித்து திருநங்கைகள் இருவரையும் கெச்சிலாபுரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்றனர்.

அப்போது திருநங்கை அனன்யாவின் தலைமுடியை அறுத்ததோடு, அதை வீடியோவும் எடுத்தனர். மேலும் இதை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர். தொடர்ந்து தாக்குதலில் காயம்பட்ட திருநங்கைகள் மகேஷ், அனன்யா ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்தனர். அப்போது அங்கு வந்த நோவாபூவன், விஜய் இருவரும் அரிவாளைக் காட்டி திருநங்கைகளை மிரட்டியுள்ளனர். இந்நிலையில் திருநங்கைகளை இவர்கள் தாக்கிய வீடியோவும் இணையத்தில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து நோவாபூவன், விஜய் ஆகிய இருவரையும் திருநங்கைகள் பாதுகாப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in