தொழில் நுட்பக்கோளாறு: மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரயில்கள் இயங்காது

தொழில் நுட்பக்கோளாறு:  மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரயில்கள் இயங்காது

பாம்பன் தூக்குப் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தூக்குப்பாலத்தில் ரயில்களின் சேவை மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நூற்றாண்டைக் கடந்த பாம்பன் பாலத்தை ரயில்கள் கடக்கும் போது ஏற்படும் அதிர்வுகளைக் கண்காணிக்க தெற்கு ரயில்வே சார்பில் சென்னை ஐஐடி குழுவினர் உதவியுடன் தூக்குப் பாலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சென்சார் கருவிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டன. இந்நிலையில் 2022 டிச.23-ம் தேதி அதிகாலை 2:31 மணியளவில், அபாய ஒலி எழுப்பியது.

இதையடுத்து ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு, ரயில்கள் அனைத்தும் மண்டபம் ஸ்டேஷனில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் டி.ஆர் குப்தா, ரயில் பாலங்கள் கட்டுமானப்பிரிவு தலைமைப் பொறியாளர் சுமித் சிங்காலே உள்ளிட்ட பொறியாளர்கள் குழு பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை டிச.24 ல் சோதனை செய்தனர்.

இந்த சோதனை முடிவுகள் லக்னோ ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து பராமரிப்பு பணிகளைத் தொடரும் வகையில் இன்று (ஜன.10) பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதுடன், பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் (மெயின் லைன் (16751/16752), கார்ட் லைன் (22661/22662) வழி ரயில்கள்),  திருப்பதி -ராமேஸ்வரம் -திருப்பதி வாரம் மும்முறை சேவை ரயில்கள் (16779/16780), கன்னியாகுமரி - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி வாரம் மும்முறை சேவை ரயில்கள் (22622/22621), அஜ்மீர் - ராமேஸ்வரம் - அஜ்மீர் (20973/20974), பனாரஸ் - ராமேஸ்வரம் - பனாரஸ் (22536/22535), ஓஹா - ராமேஸ்வரம் - ஓஹா (16734/16733) வாராந்திர விரைவு ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை ராமேஸ்வரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

 திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி, மற்றும் அனைத்து மதுரை - ராமேஸ்வரம் - மதுரை விரைவு ரயில்கள், அயோத்தியா கண்டோண்மென்ட் - ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோண்மென்ட் (22614/22613), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் - புவனேஸ்வர் (20896/20895), ஹூப்ளி - ராமேஸ்வரம் - ஹூப்ளி (07355/07356), கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் (16618/16617), செகந்திராபாத் - ராமேஸ்வரம் - செகந்திராபாத் (07695/07696) வாராந்திர விரைவு ரயில்கள் ஆகியவை மறு அறிவிப்பு வரும் வரை ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி ராமேஸ்வரம் விரைவு ரயிலின் இணை ரயிலான ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் (06780) மறு அறிவிப்பு வரும் வரை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in