ஒலித்த எச்சரிக்கை மணி: பாம்பன் ரயில் பாலத்தில் ஜனவரி 10 வரை சேவை ரத்து!

ஒலித்த எச்சரிக்கை மணி: பாம்பன் ரயில் பாலத்தில் ஜனவரி 10 வரை சேவை ரத்து!

பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நூற்றாண்டை கடந்த பாம்பன் பாலத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யவும், தூக்கு பாலத்தை ரயில்கள் கடக்கும் போது ஏற்படும் அதிர்வுகள் கண்காணிக்க தெற்கு ரயில்வே சார்பில் சென்னை ஐஐடி குழுவினர் உதவியுடன் தூக்கு பாலத்தில் 100க்கும் மேற்பட்ட சென்சர் கருவிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டன.

இந்தநிலையில் கடந்த 23-ம் தேதி அதிகாலை 2.31 மணி அளவில், அபாய ஒலி எழுப்பியது. இதையடுத்து ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிச.24 -ல் தெற்கு ரயில்வே முதன்மை தலைமைப் பொறியாளர் டி.ஆர்.குப்தா, ரயில் பாலங்கள் கட்டுமான பிரிவு தலைமைப் பொறியாளர் சுமித் சிங்காலே உள்ளிட்ட பொறியாளர்கள் குழு பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை டிச.24 ல் சோதனை செய்தனர். பாலத்தின் உறுதி தன்மை சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தனர். இந்தநிலையில் பாம்பன் ரயில் பாலத்தில் ஜன.10-ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ``பாம்பன் ரயில் பாலத்தில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னை ஐஐடி வல்லுநர்கள், காலி ரயில் பெட்டிகளை பாம்பன் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர். இம்முடிவுகள் லக்னோ ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது. இதனால், பராமரிப்பு பணிகளை தொடரும் வகையில் ஜன.10 வரை ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in