
திருப்பதி அருகே ஸ்ரீகாளஹஸ்தியில் காருடன் லாரி மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், திருப்பதி அருகே ஸ்ரீகாளஹஸ்தியில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்டது. விஜயவாடாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருமலையில் சாமி தரிசனம் செய்து விட்டு ஸ்ரீ காளஹஸ்தியை நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
இதில் காரில் பயணம் செய்த 7 பேரில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீவிர காயமடைந்த ஒருவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொணடனர். சம்பவம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்ததால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்துக் காவலர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் திருமலை சென்று திரும்பும் போது சாலைவிபத்தில் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.