பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பியபோது கோர விபத்து: 4 பேருக்கு நேர்ந்த துயரம்!

விபத்தில் நொறுங்கிய ஆட்டோ
விபத்தில் நொறுங்கிய ஆட்டோ

ராமநாதபுரம் அருகே இன்று மதியம் நிகழ்ந்த கோர விபத்தில், பச்சிளம் குழந்தை, அதன் பெற்றோர் உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் அடைக்கான், 28. டீ மாஸ்டர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை சிங்கி வலை குச்சு பகுதியைச் சேர்ந்த சேதுராஜா மகள் சுமதி, 25. இருவரும், கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுமதி பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுமதிக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், இன்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட குழந்தை, தனது கணவர், தாயார் காளியம்மாள் ஆகியோருடன் ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். உச்சிப்புளி அருகே நதிப்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை சென்ற கார் மோதியது.

இதில் படுகாயமடைந்த டிரைவர் உள்பட 5 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுமதி, பரமக்குடி அருகே மருச்சுகட்டி வித்தானூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மலைராஜ் (51) ஆகியோர் பரிதாபமாக பலியானார்.

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறந்த குழந்தை, சின்ன அடைக்கான் ஆகியோரும் பரிதாபமாக பலியாகினர்.

இவ்விபத்திற்கு காரணமான சென்னையைச் சேர்ந்த கார் டிரைவர் விக்னேஷ் (34) என்பவரை உச்சிப்புளி போலீஸார் கைது செய்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in