ஃபேஸ்புக்கில் அறிமுகம்; திருமணத்துக்கு கட்டாயப்படுத்திய வாலிபர்; கேரள பெண்ணுக்கு சென்னையில் நடந்த துயரம்

ஃபேஸ்புக்கில் அறிமுகம்; திருமணத்துக்கு கட்டாயப்படுத்திய வாலிபர்; கேரள பெண்ணுக்கு சென்னையில் நடந்த துயரம்

ஒரு தலை காதலில் கேரள இளம்பெண்ணை நடுரோட்டில் வைத்து பாட்டிலால் சரமாரி குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் ஆம்பூரி போஸ்ட் கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கேத்ரின். (பெயர் மாற்றம்) ஏர்ஹோஸ்டர்ஸ் படித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த இன்டர்ன்ஷிப் பயிற்சி நடந்துள்ளது. பயிற்சியை முடிந்து நேற்று முன்தினம் இரவு கேத்ரின் ஓட்டல் பின்புறம் உள்ள விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அப்பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கோபத்தில் தான் வைத்திருந்த மதுபான பாட்டிலால் அந்த பெண்ணை சரமாரியாக குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். வலியால் இளம்பெண் கூச்சலிடவே அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த இளம் பெண்ணை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முகம், கழுத்துப் பகுதி, கை பகுதியில் 25 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இளம்பெண்ணை கொலை செய்ய முயன்றதாக வேப்பேரியை சேர்ந்த நவீன் என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர்..

விசாரணையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இளம்பெண் கேத்ரின் உடன் ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து பார்த்துள்ளார். பின்னர் தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட வாலிபர், கடற்படையில் வேலை செய்வதாகவும் உன்னை காதலிப்பதாகவும் கேத்ரினிடம் தெரிவித்துள்ளார். இதற்கு தன்னுடைய பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என கூறி காதலை தவிர்த்து வந்துள்ளார் கேத்ரின்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேத்ரின் வேறொரு வாலிபரிடம் பேசுவதை அறிந்து கொண்ட நவீன், கீழ்ப்பாக்கத்தில் கேத்ரின் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். கேத்ரின் காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த நவீன், அப்பெண்ணை கொலை செய்ய எண்ணி கடந்த 14-ம் தேதி மாலை ஹோட்டல் வாயிலில் காத்திருந்தார். பணி முடித்துவிட்டு வெளியே வந்த கேத்ரினிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதற்கு அவர் முடியாது என மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த நவீன், `எனக்கு கிடைக்காத நீ யாருக்கு கிடைக்கக்கூடாது' என்றும் `முகத்தை சிதைத்தால் வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாது' என கூறி பாட்டிலை உடைத்து கேத்ரியின் முகத்தை குத்தி காயப்படுத்தியதும், பின்பு அவரை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதும் தெரியவந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in