
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர், தூத்துக்குடியில் தான் ஓட்டிச் சென்ற லாரியை ஒதுக்கி நிறுத்திவிட்டு சாலையைக் கடக்க முயன்றபோது, வேறு ஒரு லாரி மோதி விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(32) லாரி ஓட்டுநராக இருந்து வந்தார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளுக்கும் டெலிவரி செய்ய வந்தார். இவர் தூத்துக்குடி ஸ்பிக்நகரில் லாரியை நிறுத்திவிட்டு மடத்தூர் பகுதிக்கு சென்று இருந்தார். அங்கு அவர் சாலையைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று விஜய் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். சிப்காட் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விஜய் உடலைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநர் சாலையைக் கடக்க முயன்றபோது பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.