காட்டுப்பகுதியில் குறுக்கே பாய்ந்த 'மிளா': பைக்கில் வீடு திரும்பிய பழங்குடி தொழிலாளி உயிரிழந்த சோகம்

காட்டுப்பகுதியில் குறுக்கே பாய்ந்த 'மிளா': பைக்கில் வீடு திரும்பிய பழங்குடி தொழிலாளி உயிரிழந்த சோகம்

மிளகு பறிக்கும் வேலை செய்யும் காணி பழங்குடி தொழிலாளி டூவீலரில் வனப்பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்த போது மிளா குறுக்கே பாய்ந்தது. இதில் தொழிலாளி கீழே விழுந்து உயிர் இழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், வலியமலை காணி பழங்குடி குடியிருப்பைச் சேர்ந்தவர் வினு(28). இவரது மனைவி சரண்யா(24) இந்தத் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். அண்மைக்காலமாக சரண்யாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தன் மனைவி சரண்யாவையும், இருமகன்களையும் வினுவே தனது பொறுப்பில் வைத்துப் பராமரித்து வந்தார்.

வினு, குலசேகரம் பகுதியில் மிளகு பறிக்கும் வேலை செய்துவந்தார். இவர் வழக்கம்போல் மிளகினைப் பறித்துவிட்டு பாறைமலை பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல்(22) என்பவரின் பைக்கில் பின் சீட்டில் இருந்து வந்துகொண்டு இருந்தார். வனப்பகுதியில் இவர்களது பைக் வந்து கொண்டு இருந்தபோது, அன்புநகர் அருகே திடீரென காட்டு மிளா ஒன்று குறுக்கே பாய்ந்தது. இது பைக் மீது பலமாக மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களை அப்பகுதிவாசிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வினு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி வினு பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in