லஞ்சம் கேட்டு மிரட்டும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்: வைரல் வீடியோவால் அதிரடி நடவடிக்கை

நாகராஜன்.
நாகராஜன்.

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வாலிபர் 10 ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய பின்பும், அவரது வாகனத்தை ஒப்படைக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டிய போக்குவரத்து காவல் ஆய்வாளரின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அசோக் நகர் பகுதியில் கடந்த 5-ம் தேதி இரவு போக்குவரத்துப் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை மடக்கி பிரெத் ஆனலைசர் கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது. அதனடிப்படையில் அந்த நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸார் அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அபராதத் தொகையாக 10 ஆயிரம் ரூபாயை செலுத்திய அந்த வாலிபர் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க அசோக் நகர் காவல் நிலையம் வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜனிடம் சென்று தனது வாகனத்தின் சாவியைக் கேட்டுள்ளார். சாவியைக் கொடுக்க வேண்டுமென்றால் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால், உனது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து விடுவேன் என்று நாகராஜன் மிரட்டியுள்ளார்.

அந்த வாலிபர் தனக்கு இன்னும் சம்பளம் போடவில்லை, தன்னிடம் பணமில்லை என எவ்வளவோ எடுத்துக்கூறியும், விடாபிடியாக லஞ்சம் கேட்டு போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் மிரட்டியுள்ளார். பல முறை அலையவிட்டபின் இறுதியாக அந்த வாலிபரிடமிருந்து ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு இருசக்கர வாகன சாவியை கொடுத்த ஆய்வாளர் நாகராஜன் , சம்பளம் வாங்கியதும் மீதமுள்ள 4 ஆயிரம் ரூபாயை தன்னிடம் கொடுக்க வேண்டும் என எச்சரித்து அனுப்பினார்.

இந்நிலையில் அசோக் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் பாதிக்கப்பட்ட நபரை பணம் கேட்டு மிரட்டும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆய்வாளர் நாகராஜன் நாள்தோறும் பல்வேறு வாகன ஓட்டிகளை மிரட்டி லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் வாகன ஓட்டியிடம் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டு மிரட்டிய போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in