நடுரோட்டில் வியாபாரி வெட்டிக் கொலை - அலங்காநல்லூரில் பரபரப்பு

வியாபாரி வெட்டிக் கொலை
வியாபாரி வெட்டிக் கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நேற்று இரவு வியாபாரி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாபாரி வெட்டிக் கொலை
வியாபாரி வெட்டிக் கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பா குடியை சேர்ந்தவர் பாலன் (வயது45). இவர் சொந்தமாக கீ செயின் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். மேலும் இவர் வீடுகளுக்கு குடிநீர் கேன் சப்ளை செய்யும் தொழிலும் பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தனது கம்பெனியை மூடிவிட்டு பாலன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். சிக்கந்தர்சாவடி-கோவில்பாப்பாகுடி மெயின் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது திடீரென மர்ம நபர் ஒருவர் வழிமறித்ததாக தெரிகிறது. உடனே பாலன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது மர்ம நபர் கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாலனின் காலில் சரமாரியாக வெட்டினார். இதன் காரணமாக பாலனால் அங்கிருந்து தப்பி செல்ல முடியவில்லை. தொடர்ந்து மர்ம நபர் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் பாலன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் கொலையாளி அங்கிருந்து தப்பினார்.

இரவு நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு உடனடியாக தெரியவில்லை. சில மணி நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் பாலன் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலன் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது பணப்பிரச்சினை, முன்விரோதம் போன்ற காரணத்தால் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும், கொலையாளியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in