‘ஆபத்பாந்தவனாக மாறிய டிராக்டர்கள்’ - பெங்களூருவில் மக்களை மீட்கும் புதிய ஹீரோ!

‘ஆபத்பாந்தவனாக மாறிய டிராக்டர்கள்’ - பெங்களூருவில் மக்களை மீட்கும் புதிய ஹீரோ!

பெங்களூரு வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் கதாநாயகனாக உருவெடுத்துள்ளது

டிராக்டர் இயந்திரம். அதுபோல மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் புல்டோசர்கள் ஆகியவையும் மீட்புப்பணியில் பெரும் பங்காற்றிவருகின்றன.

இந்தியாவின் ஐடி தலைநகரமாக விளங்குவது கர்நாடகாவின் பெங்களூரு. இந்த நகரில்தான் உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதுபோல இந்தியாவின் முக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இங்குதான் உள்ளது.

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நகரில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதற்காக மீட்புப்பணிகளை கர்நாடக மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நகரில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும், சிக்கியுள்ள மக்களை வெளியேற்றவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில்தான் பெங்களூரு வெள்ளத்தில் மக்களை மீட்கும் ஆபத்பாந்தவனாக மாறியுள்ளது விவசாயிகளின் ட்ராக்டர் இயந்திரம். மீட்பு வாகனங்கள் செல்ல முடியாத சேறும், சகதியுமான தெருக்களில் எல்லாம் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகிறது டிராக்டர்கள்.

இது தொடர்பான ஒரு வீடியோவில் பெரிய பங்களாக்கள் எல்லாம் நீரில் மூழ்கியுள்ளன. வீட்டின் முகப்பில் நிறுத்தப்பட்டுள்ள பிஎம்டபுள்யூ, ஆடி, பென்ஸ் போன்ற கார்களை எல்லாம் நகர்த்த முடியாமல் நீரில் மூழ்கிக் கிடக்கும் சூழலில், ஒரு டிராக்டர் பாதிக்கப்பட்ட மக்களை இலகுவாக மீட்டு செல்கிறது.

4 நாட்களாக வடியாத வெள்ளத்தின் மீட்புப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து வரும் முதல்வர் பசவராஜ் பொம்மை, இது மீண்டும் நடக்காது என்று உறுதியளித்து பல நூறு கோடிகளை ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் கர்நாடகாவின் தலைநகரில் மூன்று நாட்களாக நடந்து வரும் சோகத்திற்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மற்றொரு வைரலான வீடியோவில், எட்-டெக் நிறுவனமான அனாகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் முன்ஜாலின் குடும்ப உறுப்பினர்களை டிராக்டர் மூலமாக மீட்கப்பட்டதை அவரே ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அதில், "இப்போது நீரில் மூழ்கியுள்ள பகுதியிலிருந்து ஒரு டிராக்டரில் எனது குடும்பத்தினர் மற்றும் செல்லப்பிள்ளை ஆல்பஸ் ஆகியோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். விஷயங்கள் மோசமாக உள்ளன. மக்களுக்கு உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும். என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் கடலோர மற்றும் தெற்கு உள் மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் மழையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தாலும், முந்தைய மழையினால் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் வடியவில்லை. பெங்களூரில் இன்னும் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னதான் ஐடி தலைநகரமாக இருந்தாலும் ஆபத்து காலங்களில் மக்களை மீட்க எங்களின் டிராக்டர்கள்தான் உதவி வருகின்றன என பெருமை கொள்கின்றனர் விவசாயிகள். வயலில் மட்டுமல்ல வெள்ளம் பாதித்த சாலைகளிலும் நாங்கள்தான் ராஜா என தடதடத்தபடி மீட்புப்பணியில் இறங்கியுள்ளன டிராக்டர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in