பஸ்ஸ்டாண்டில் பச்சிளங்குழந்தைக்கு மது கொடுத்து சித்திரவதை: போதை பெண்ணால் போலீஸார் அதிர்ச்சி

பஸ்ஸ்டாண்டில் பச்சிளங்குழந்தைக்கு மது கொடுத்து சித்திரவதை: போதை பெண்ணால் போலீஸார் அதிர்ச்சி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஒரு மாத பச்சிளங்குழந்தைக்கு மதுவைக் குடிக்க வைத்து பெண் ஒருவர் அடித்து சித்திரவதை செய்யும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு வாரமான ஆண் குழந்தையை நேற்று கையில் வைத்துக் கொண்டு அந்த குழந்தைக்கு வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி இருக்கிறார். அத்துடன் அவரும் மதுவைக் குடித்துள்ளார். இதன் பின் போதையில் அந்த குழந்தையை போட்டு அடித்து சித்திரவதை செய்திருக்கிறார். மது குடித்ததால் அந்த குழந்தை மயங்கியது.

இதைப் பார்த்த பேருந்து நிலையத்தில் இருந்த வியாபாரிகள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், அந்த பெண்ணிடமிருந்த குழந்தையைப் பறித்துள்ளனர். இது என் குழந்தை என அந்த குழந்தையை அந்தப் பெண் தர மறுத்துள்ளார். அப்போது அவர் வைத்திருந்த பையில் சில மதுபாட்டில்கள் இருந்ததால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அந்த குழந்தையை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர் . மருத்துவப் பரிசோதனையில் அந்தகுழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள் இருக்க்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பெண்ணின் குழந்தை தானா அல்லது வேறு யாரிடமிருந்தாவது குழந்தையை எடுத்து வந்து விட்டாரா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தைக்கு மது குடிக்க வைக்கும் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in