இரவு நேரங்களில் ஆபாச மெசேஜ் அனுப்பி டார்ச்சர்: டியூசன் எடுக்கும் உடற்கல்வி ஆசிரியர் மீது மாணவிகளின் அதிர்ச்சி புகார்


இரவு நேரங்களில் ஆபாச மெசேஜ் அனுப்பி டார்ச்சர்: டியூசன் எடுக்கும் உடற்கல்வி ஆசிரியர் மீது  மாணவிகளின் அதிர்ச்சி புகார்

தன்னிடம் டியூசன் படிக்கும் மாணவிகளிடம் செல்போன்களை வாங்கி அவர்களுக்கு இரவு நேரத்தில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி டார்ச்சர் செய்த உடற்கல்வி ஆசிரியர் மீது பாலியல் ரீதியான புகார்கள் குவிந்து வருகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த மருதூரைச் சேர்ந்தவர் அசோகன் ( 38 ). இவர் உடற்கல்வி ஆசிரியராக கத்தரிப்புலம் அரசு மேல்நிலையில் பணியாற்றி வருகிறார். அத்துடன் கத்தரிப்புலம் கடைத்தெருவில் டியூசன் சென்டரும் நடத்தி வருகிறார். அதில் காலை, மாலை வேலைகளில் 10,11,12--ம் வகுப்பு மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் தனது டியூசன் சென்டரில் படிக்கும் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலரிடம், அசோகன் செல்போன் எண்களை வாங்கியுள்ளார். இரவு நேரங்களில் அந்த எண்களுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். அத்துடன் மாணவிகளிடம் அவர், பாலியல் ரீதியாகவும் நேரில் பேசியுள்ளார். இதுகுறித்து நீங்கள் பெற்றோரிடம் சொல்லக்கூடாது என்று மாணவிகளை மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில், உடற்கல்வி ஆசிரியர் அசோகன் மீது கத்தரிபுலம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குமாரிடம் 12 மாணவிகள் புகார் அளித்தனர். இதனால் தலைமை ஆசிரியர் குமார் அதிர்ச்சியடைந்தார். இதையறிந்த உடற்கல்வி ஆசிரியர் அசோகன் 15 நாள் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.

மாணவிகள் அளித்த புகார்களைப் பெற்ற தலைமை ஆசிரியர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார்.

இதன் பேரில் நாகை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் குமார், உடற்கல்வி ஆசிரியர் அசோகன் மீது கரியப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆசிரியர் அசோகன் மீது குவிந்து வரும் பாலியல் புகார்களால் நாகை மாவட்ட கல்வித்துறை வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in