அக்னிபத் போராட்டத்தைத் தூண்டியதாக மாவோயிஸ்ட் தலைவர் கைது: என்ன சொல்கிறது பிஹார் காவல் துறை?

அக்னிபத் போராட்டத்தைத் தூண்டியதாக மாவோயிஸ்ட் தலைவர் கைது: என்ன சொல்கிறது பிஹார் காவல் துறை?

ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் பணிகளுக்காக ‘அக்னிபத்’ திட்டத்தை ஜூன் 14-ம் தேதி அறிவித்தது மத்திய பாதுகாப்புத் துறை. இந்தத் திட்டத்தில் சேரும் அக்னிவீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி வழங்கப்படும் என்றும், அதற்குப் பின்னர் அவர்களில் 25 சதவீதம் பேர் அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பணியில் தொடர்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. எஞ்சிய 75 சதவீதம் பேர் என்ன ஆவார்கள் என்று எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் கேள்வி எழுப்பினர். ராணுவக் கனவில் இருந்த பல இளைஞர்கள் தங்கள் பணிவாய்ப்பு பறிபோவதாக எதிர்க்குரல் எழுப்பினர். பிஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக, பிஹாரில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் பல ரயில்கள் எரிக்கப்பட்டன.

இந்நிலையில், பிஹாரின் லக்கீசராய் நகரில் ரயில் கொளுத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என மாவோயிஸ்ட் தலைவரான மனஷ்யாம் தாஸ் என்பவரை பிஹார் போலீஸார் நேற்று கைதுசெய்தனர். அவரும் மாவோயிஸ்ட் அபிமானிகளும் இந்தப் போராட்டங்களைத் தூண்டிவிட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர். தெலங்கானா மாநில உளவுத் துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில், அவரை பிஹார் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவரான அவரது கைது இந்த வழக்கில் ஒரு முக்கியத் திருப்புமுனை என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

லக்கீசராய் நகரில் பல ஆண்டுகளாகத் தங்கியிருந்த அவர், பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இயங்கிவரும் நக்ஸல் தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், காடுகளில் தங்கியிருக்கும் மாவோயிஸ்ட் தலைவர்களைப் பலமுறை நேரில் சந்தித்திருப்பதாகவும் பிஹார் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். அவரது அறையிலிருந்து மாவோயிஸம் இலக்கியம் தொடர்பான புத்தகங்கள், செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

பாகல்பூரில் வசித்துவரும் பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக போலீஸாரிடம் மனஷ்யாம் தாஸ் தெரிவித்திருக்கிறார். ஆனால், அதை அவர் மறுத்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in