பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்: தேதியை நீட்டிக்குமா தமிழக அரசு?

கொள்ளிடம் ஒன்றியம் புளியந்துறை கிராமத்தில் நீரில் மூழ்கிக் கிடக்கும் சம்பா பயிர்கள்
கொள்ளிடம் ஒன்றியம் புளியந்துறை கிராமத்தில் நீரில் மூழ்கிக் கிடக்கும் சம்பா பயிர்கள்

பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களை  பயிர்க் காப்பீடு செய்வதற்கு நாளை (15-ம் தேதி) கடைசி நாள் என்பதால் விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நடப்பு 2022-2023-ம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில்  இதுவரை 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம்,  சுமார் 11 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை சம்பா,  தாளடி  நெற்பயிரை காப்பீடு செய்யாத பயிர்க்கடன்பெற்ற விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சென்று உடனடியாக தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அறிவுறுத்தியுள்ளது.

பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களில்  உரிய ஆவணங்களுடன் நாளைக்குள் அதாவது நவம்பர் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளுமாறு  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வலியுறுத்தி உள்ளது. 

தற்போது, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமடைந்து பெரும்பாலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் மறக்காமல் உடனடியாக சென்று பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும்  கடலூர் மாவட்டங்களில் மழையின் காரணமாக மின்சாரம் தடைபட்டு பயிர் காப்பீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் பயிர் காப்பீடு செய்துகொள்ள இம்மாதம் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு  செய்துதர வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் காட்டுமன்னார்கோயில் கே.வி. இளங்கீரன்  உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள் பலரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in