தக்காளி விலை மீண்டும் உயர்வு
தக்காளி விலை மீண்டும் உயர்வுதக்காளி விலை மீண்டும் உயர்வு: ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பதால் பொதுமக்கள் அவதி

தக்காளி விலை மீண்டும் உயர்வு: ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பதால் பொதுமக்கள் அவதி

சென்னையில் தக்காளி விலை மீண்டும் கிலோவிற்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வெயில் மற்றும் திடீர் மழை காரணமாக இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை தாறுமாறாக ஏறி வருகிறது.

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளதால் தமிழ்நாட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியாது என்பதால், பொதுமக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே, தக்காளி விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பண்ணை பசுமை நுகர்வோர் கடை மற்றும் நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. இத்திட்டம் தமிழகம் முழுவதும் பரவலாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், திடீரென தக்காளி விலை இன்று கிலோ ஒன்றிற்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று ஒரு கிலோ முதல் தர தக்காளி 130 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிலோ தக்காளி நேற்று 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதால் ஏழை , எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளி விலையைக் கட்டுப்படுத்தவும், தாராளமாக தக்காளி கிடைக்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in