குழந்தைகளை அதிகம் தாக்கும் தக்காளி காய்ச்சல்: தமிழகத்துக்கும் எச்சரிக்கை!

தக்காளி வைரஸ்
தக்காளி வைரஸ்

இந்தியாவை உலுக்கிய கரோனா, குரங்கு அம்மை பாதிப்புகளைத் தொடர்ந்து, தற்போது தக்காளி காய்ச்சல் பாதிப்பு அடுத்த பீதியை கிளப்பியுள்ளது. இந்தியாவில் தக்காளி காய்ச்சல் பரவல் குறித்து சர்வதேச மருத்துவ இதழான லான்செட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தக்காளி காய்ச்சல் முதன்முதலாக கடந்த மே மாதம் 5ம் தேதி கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் பதிவான நிலையில், இதுவரை கேரளாவில் 82 குழந்தைகள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஒடிசாவிலும் 26 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவியுள்ள நிலையில், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவற்றுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிக வேகமாக பரவும் தன்மை கொண்ட தக்காளி காய்ச்சல் என்பது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என லான்செட் இதழ் எச்சரித்துள்ளது. மேலும், இது மிகப்பெரிய தொற்று நோயாக கருதப்படுகிறது. தக்காளி காய்ச்சல் தொற்று ஏற்பட்டால் கை, கால், வாயின் உள்பகுதியில் சிறு கொப்புளங்கள் தோன்றும். கால்-கை வலிப்பு மற்றும் சிறுநீரக நோய் உள்ள குழந்தைகளை தக்காளி காய்ச்சல் அதிகம் பாதிக்கலாம், அதிக காய்ச்சல், உடம்பு வலி, கை, கால் மூட்டுகள் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளன. இந்த தொற்றினால் உடலில் தோன்றும் கொப்புளங்கள் நிறத்திலும், வடிவத்திலும் தக்காளியை ஒத்திருப்பதால், இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில், தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக - கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in