தீவிரமடையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: உளுந்தூர்பேட்டையில் போலீஸ் குவிப்பு!

தீவிரமடையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: உளுந்தூர்பேட்டையில் போலீஸ் குவிப்பு!

செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பணிநீக்கம் செய்யப்பட்ட 28 பேரை மீண்டும் பணியமர்த்தக் கோரி, சுங்கச்சாவடி ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கடந்த 1-ம் தேதி காலை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 28 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து சுங்கச் சாவடி ஊழியர்கள் நிர்வாகத்திற்கு எதிராகத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருக்கோவிலூர் வருவாய்க் கோட்டாட்சியர் ஏகஜோதி தலைமையில், டிஎஸ்பி மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் 1-ம் தேதியிலிருந்து 3-ம் தேதி இரவு வரை சுங்கக் கட்டணம் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் பயணித்தன. இதனால் சுங்கச் சாவடிக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பாஸ்ட்ராக் முறையில் வாகனங்களிடம் பணம் வசூல் செய்யும் முறை நேற்று நள்ளிரவு முதல் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து பிரச்சினை மற்றும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமலிருக்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட்ராக் முறையில் கட்டணம் வசூல் செய்யும் முறை தொடர்கிறது. சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுத்து வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in